மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை..

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அதை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தொழில்நுட்ப காரணங்களை காட்டி சீனா அந்த நடவடிக்கைக்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

பிரிட்டன், ஃபிரான்ஸ் உடன் இணைந்து இதற்காக வரைவு தீர்மானத்தை தயாரித்துள்ள அமெரிக்கா, அந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சுற்றுக்கு விட்டுள்ளது.

சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிப்பதன் மூலம், அவன் வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியாதபடி பயணத்தடை விதிக்கப்படும். இதேபோல, அவனது சொத்துகளும் நிதியாதாரங்களும் முடக்கப்படும்.

அமெரிக்காவின் புதிய தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எப்போது வாக்கெடுப்புக்கு வரும் என தகவல் இல்லை.