காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு நீக்கப்படும்.
அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டக்குழு மீண்டும் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
1950-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திட்டக்குழு கொண்டுவரப்பட்டது. அதன்பின் பல்வேறு கட்சிகள் நாட்டில் ஆட்சியில் இருந்தபோதிலும்,
பாஜக மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதிலும் திட்டக் குழு செயல்பாட்டில் இருந்தது.
ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி வந்த பின் காலம் காலமாக இருந்த திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த திட்டக்குழு மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது என்றும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விளம்பரப்படுத்துகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக நியாயம் திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.
அந்தத் திட்டத்தின்படி, 20 சதவீதம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தத் தேர்தல் அறிக்கையை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதைக் கவனத்தில் கொண்ட தேர்தல் ஆணையம், ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அதில் ” பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் உருவாக்கப்பட்டது.
புள்ளிவிவரங்களைத் திருத்தி அளித்து, பிரதமர் மோடியை விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்து வேறு எதையும் அந்த அமைப்பு செய்யவில்லை.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் நிதி ஆயோக் நீக்கப்படும். அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவாறு மீண்டும் திட்டக்குழு கொண்டுவரப்படும்.
அந்த திட்டக்குழுவில் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், சந்தை வல்லுநர்கள் உள்ளிட்ட 100 பேருக்குக் குறையாத குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் ட்விட்டருக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் வி.கே.சிங் ரீட்வீட் செய்துள்ளார். அதில், “கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களின் கட்சி ஆட்சியில் இருந்தது.
உங்களின் குடும்பத்தின் பார்வையில் அமைக்கப்பட்ட திட்டக்குழு போதுமான அளவுக்கு சிறப்பாக, தன்னிறைவாகச் செயல்படவில்லை.
அவசரச் சட்டங்களை ரத்து செய்வது, நிறுவனங்களை அழிப்பது போன்றவற்றில் செயல்படுவதற்குப் பதிலாக நாட்டுக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள் ராகுல் காந்தி” எனத் தெரிவித்துள்ளார்.