உ.பி. யில் பாஜகவிற்கு நெருக்கடி? : பிரச்சனையை சமாளிக்க அமித்ஷா வியூகம்..

மக்களவை தேர்தலில் தனது 16 உத்தரபிரதேச எம்.பி.க்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளால் உருவான அதிருப்தியாளர்களால் பாஜகவுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

உ.பி.யில் பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்களில் தனது 16 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.

இவர்களில் ஆஷீல் வர்மா மற்றும் ஷியாமா சரண் குப்தா ஆகியோர் அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.

மற்றொரு எம்பியான அசோக் டோரே காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவான பாஜக வாக்குகளை தாம் புதிதாக இணைந்த கட்சிகளுக்கு பெற்றுத்தரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதில் ஒருவரான பாராபங்கி தொகுதி பாஜக எம்பியான பிரியங்கா ராவத் தமக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பொதுக்கூட்டத்தின் மேடையில் கண்ணீர் மல்க பாஜக மீது புகார் கூறினார்.

இதைகேட்டு பாராபங்கியின் ஆதரவாளர்கள் பிரியங்காவிடம் சுயேச்சையாகப் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரியங்காவுடன் வாய்ப்பிழந்த அன்சுல் வர்மா, கிருஷ்ணா ராய், அஞ்சு பாலா மற்றும் அசோக் டோரா ஆகியோர் தலித் சமூகத்தினர். இதனால், பாஜக தலித்துகளுக்கு எதிரானவர்கள் எனவும் பேசி வருகின்றனர்.

மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவிற்கும் மறுவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனால், அவர்களது ஆதரவாளர்கள் இருவரையும் அதே தொகுதிகளில் சுயேச்சைகளாகப் போட்டியிடுமாறு வற்புறுத்தி வருகின்றனர். எனினும், அதற்கு இரண்டு தலைவர்களும் ஆதரவளிக்காமல், தன் ஆதரவாளர்களிடம் அமைதி காக்கும்படி கூறி வருகின்றனர்.

இதனிடையே, நான்கு எம்பிக்களுக்கு தொகுதிகள் இடம் மாற்றப்பட்டு தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியின் பிலிப்பித் அவரது மகன் வருண்காந்திக்கு மாற்றப்பட்டுள்ளது.

வருணின் சுல்தான்பூர் தொகுதி மேனகாவுக்கு மாற்றி அளிக்கப்பட்டுள்ளது. ராம்சங்கர் கட்டாரியா, ஆக்ராவில் இருந்து எட்டாவாவிற்கும், வீரேந்தர்சிங் மஸ்த் பஹதோயில் இருந்து பலியாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதனால், நான்கு எம்பிக்களும் தம் தலைமையின் மீது அதிருப்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, மாற்றத்தின் தாக்கம் அவர்கள் வெற்றியை பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.

பஹதோய் எம்பியான வீரேந்தர் மீது பலியாவில் வாய்ப்பு மறுக்கப்பட்டவரான பரத் சிங் தன் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தம் தொகுதி பறிக்கப்பட்டதை கண்டித்தும், அங்கு வாய்ப்பளிக்கப்பட்ட விரேந்தர் மீது புகாரும் கூறி உள்ளார்.

இத்துடன், பெரிதும் எதிர்பார்த்து போட்டியிட வாய்ப்பு கிடைக்காத உ.பி. பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆக்ராவின் அருகிலுள்ள பதேபூர் சிக்ரியில் வாய்ப்பு கிடைக்காதவரான சவுத்ரி பாபுலா, தன் ஆதரவாளர்களுடன் அங்கு சாலை மறியல் போராட்டம் நடத்தியிருந்தார்.

இதனால், அவருக்கு பதிலாக பாஜகவிடமிருந்து டிக்கெட் பெற்ற ராஜ் குமார் சோஹார் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.

தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக பாஜக சார்பில் பல தனியார் நிறுவனங்கள் அதன் எம்பிக்கள் மீது ரகசிய சர்வே நடத்தினர்.

அந்த முடிவுகளின் அடிப்படையில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா புதிய வேட்பாளர்களை தம் ஆட்சிமன்றக்குழுவின் முன் பரிந்துரைத்ததாகக் கருதப்படுகிறது. இதற்காக கிளம்பிவரும் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியிலும் அமித்ஷா ஈடுபட்டுள்ளார்

ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..

வருமானவரித்துறை சோதனையால் எங்களுக்கு அனுதாப ஓட்டு கிடைக்கும் : துரைமுருகன்

Recent Posts