சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
சேலம் – சென்னை இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக சுரேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அதன்பிறகு, தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
வழக்கு விசாரணையின்போது 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதேபோல, வனத்துறை பகுதிகளிலும் குறுக்கிடும் இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசும் வழக்கு விசாரணையின் போது உத்தரவாதம் அளித்து இருந்தது.
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலைகளை அமைத்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என நீதிபதிகளும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (திங்கள்கிழமை_) காலை தீர்ப்பளித்தனர்.
அதில் 8 வழிச்சாலைக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதன்மூலம் 8 வழிச்சாலை திட்டத்தை உயர் நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்துள்ளது.