அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமானவர்கள், இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு முழு உருவ சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது.
அப்போது இந்த சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் சிலை உடைப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள்,
அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பது,
அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து,
வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.
பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, காவல்துறை மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில்,
அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி,
இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.