நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்: பிரச்சாரத்தில் உயிர் பிரிந்தது..

முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

‘சின்னபுள்ள’ படத்தில் அறிமுகமான இவர் ‘நாயகன்’ என்ற படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாகவும் நடித்தார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் யாருக்குமே தெரியாது.

அதன்பின்னர் அவர் பிரபலமானார். திரையுலகில் அனைவருக்கும் உதவி செய்வது, சங்கப்பணிகளில் வேகம் காட்டியது அவரை வேகமாக திரையுலகின் முக்கிய பிரமுகராக்கியது.

2014-ம் ஆண்டு திமுகவிலிருந்து திடீரென அதிமுகவிற்கு தாவினார் ரித்தீஷ். அதன்பின்னர் இன்னும் செல்வாக்குடன் இருந்த அவர் உதவியால் விஷால் நடிகர் சங்கத்தைக் கைப்பற்ற முடிந்தது. அதன்பின்னர் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எதிரணிக்குத் தாவினார்.

இந்நிலையில் அதிமுக அணியில் உள்ள அவர் தனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவருக்கு கடுமையான மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தற்போது ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளது.

ரித்தீஷ் மரணம் திரையுலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டு : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து ..

2016 தேர்தலை ஊழல் பணத்தால் விலைக்கு வாங்கிய அதிமுக: ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு

Recent Posts