அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரனால் தொடங்கப்பட்ட அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தில் அமமுகவை விரைவில் கட்சியாக பதிவு செய்வதாக தினகரன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அப்போது, அம்மா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். அடுத்த 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வருவதால், அதற்கு பொதுச் சின்னம் தேவை என நீதிமன்றத்தை நாடினால், அப்போது அமமுகவை பதிவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டால், அதிமுகவுக்கும், இரட்டை இலைச் சின்னத்திற்கும் உரிமை கோரும் தினகரனின் முயற்சி சட்டரீதியாக செல்லுபடியாகாது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அமமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவதால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவர் உரிமை கோர ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.