தனக்கு சவால் என்றால் அது தான் மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் நவ் முதன்மை ஆசிரியர் ராகுல் சிவ்ஷங்கர் மற்றும் நவிகா குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில் நிறைய கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தவித்திருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக பணமதிப்பிழப்பு, தீவிரவாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குரை வேட்பாளராக நிறுத்தியது போன்ற விவகாங்களுக்கு அவரால் நேரடியான எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை. தனக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுப்பாத ஆதரவுத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியிலேயே அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்றால்., நேர்மையான கேள்விகளுக்கு அவரால் எப்படிப் பதிலளித்திருக்க முடியும். பேட்டிகளையும், செய்தியாளர் சந்திப்பையும் மோடி ஏன் தவிர்த்து வருகிறார் என்பதை இந்தப் பேட்டியைப் படித்தாலே புரிந்து கொள்ள முடிகிறது.
இதோ அந்த பிரத்தியேக பேட்டியின் முழு வடிவம்:
கேள்வி: 185 இடங்களுக்கான இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஆட்சியில் இருந்த இந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இப்போதும் மோடி அலை இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?
பிரதமர் மோடி பதில்: இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், முதலில் நான் வாக்காளப் பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்ற வாக்காளர்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒருபக்கம் வெயில், மறுபக்கம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்திருக்கும் சமயம் என மே மாதம் தேர்தலுக்கு பொருத்தமான மாதம் இல்லைதான். எனினும், இந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதைக் காணும்போது, இந்த தேசத்தின் மக்களான அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
என்னுடைய பிரச்சாரத்திற்கு நான் செல்லும் இடங்களில் எல்லாம், அதே ஆதரவை நான் கண்களால் கண்டேன். இந்த தேர்தலில் ஊடகங்கள் தவறவிட்ட ஒரு கருத்தை, டைம்ஸ் நவ் எதிர்வரும்போது முன்னெடுக்கலாம். 2014ம் ஆண்டு தேர்தலின் சிறப்புகள் மற்றும் 2019ம் ஆண்டு தேர்தலின் சிறப்புகள் என்ன?
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: நான் இதை தங்களிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன்.
பிரதமர் நரேந்திர மோடி பதில்: சுதந்திரம் வாங்கியதில் இருந்து காங்கிரஸ் போட்டியிட்ட தேர்தல்களில் மிகக்குறைந்த ஓட்டுகளை காங்கிரஸ் பெற்ற ஆண்டு 2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகள். மிகக்குறைந்த அளவிலானவர்களே அவர்கள் சார்பாக பாராளுமன்றத்திற்கு வர முடிந்தது. 2019ம் ஆண்டு தேர்தல், சுதந்திரக்கு பிறகு முதன் முறையாக காங்கிரஸ் மிக்குறைந்த இடங்களுக்கு போட்டியிடுகிறது. குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் கூட அங்கு நிறுத்துவதற்கு தகுதியான போட்டியாளர்கள் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு கூட்டணி மற்றும் ஆதரவாளர்கள் தேவைப்படுகின்றனர். இதுதான் இந்திய ஊடகங்கள் கவனிக்கத் தவறிய ஒன்று.
நிர்வாக ஆசிரியர் நவிகா குமார்: காங்கிரஸுக்கு நீங்கள் சொல்வதுபோல கூட்டணியை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு எப்போதுமே நாட்டு மக்களுடன் நேரடி தொடர்பு உண்டு. 2014ம் ஆண்டு, தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே உங்களுடைய தேர்தல் கால பயணங்களை நீங்கள் துவங்கி எளிய மனிதர்களுடன் கூட உங்களுடைய நட்பை உறுதிப்படுத்திக் கொண்டீர்கள். 2014ஆம் ஆண்டில், மோடி மேஜிக் என்கிற கனவை ஒவ்வொரு சாமனிய குடிமகனின் கண்களிலும் பார்க்க முடிந்தது. காங்கிரஸின் ஆட்சியால் அவர்கள் சோர்ந்து போயிருந்தனர். ஆனால், 2019ம் ஆண்டில் மக்கள் அந்த மேஜிக் மீண்டும் இல்லை என்கின்றனர். ஏனெனில், கடந்த ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சில மனக்குறைகளுக்கு பதில் தேவை என்று கேட்கின்றனர். அதற்கான எதிரொலியும் தற்போது தேர்தலில் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி: நீங்கள் நான் தேர்தல் பயணத்தை முன்னெடுத்தேன் என்று சொன்னால், அது எனக்கு தவறிழைப்பதாகும். ஏனெனில், என்னுடைய 18 வருட அனுபவத்தை எடுத்துப் பாருங்கள். 2001ம் ஆண்டில் நான் ஆட்சியமைப்பில் நுழைந்ததில் இருந்தே ஒரு நாள் கூட மக்களுடன் இல்லாமல் இருந்ததில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் நான் நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் சென்றிருக்கிறேன். ஜனநாயகத்தில், ஒரு நாட்டை குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து நடத்த இயலாது. இந்த நாடு மிகப்பெரியது; பல குணாதிசியங்களை உள்ளடக்கியது. அதனால்தான் மக்களிடையே சென்று, ஜனநாயக நாட்டின் ஒவ்வொரு எளிய மனிதரிடமும் நாங்கள் எங்களை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாக இருந்தது. அதை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். இப்போதைய தேர்தல், நான் மக்களுக்கு தர வேண்டிய நன்றி. கடந்த ஐந்தாண்டுகள் மக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி சொல்லும் தருணம் இது. அவர்களுடைய பிரார்த்தனைகளை எங்களுக்கு அளித்தனர். கடினமான சூழ்நிலைகளிலும் இந்த நாடு என் பின்னால் துணை நின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது யாருடைய விளையாட்டு முடிவுக்கு வந்ததோ, யாருடைய பணத்திற்கு மதிப்பில்லாமல் போனதோ மக்களை எங்களுக்கு எதிராக தூண்டிவிட என்னவெல்லாமோ செய்தார்கள். ஏடிஎம், வங்கி வாயிலில் நீண்ட வரிசைகளை காட்டினார்கள், டிவி சேனல்களிலும் இந்த வரிசைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால், எளிய குடிமக்கள் இந்த ஆட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கை அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. 80% நோட்டுகள் மாற்றப்பட்ட போதும், மக்கள் இதயப்பூர்வமாக தங்களுடைய ஆதரவைக் கொடுத்தனர்.
அதுபோன்ற நிறைய தருணங்கள், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஆட்சியை வீழ்த்த துடித்த நிறைய தருணங்கள். 40 ஜவான்களின் மரணமென்பது எளிதான விஷயமல்ல. இந்த ஆட்சியே வீழ்ந்துவிடும் என்கிற நிலையிலும், இந்த நாடு எங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்தது. அமைதியைக் காட்டியது. ‘மோடி இருக்கிறார்; அவர் கண்டிப்பாக ஏதாவது செய்வார். இது அவருடைய தவறு இல்லை; அவர் எதுவும் தவறாக செய்திருக்க மாட்டார்’ என்கிற நம்பிக்கையை இந்த தேசம் எனக்கு காட்டியது. இந்த தருணத்தில், அப்போது தெரிந்த அதே பிரகாசத்தை இந்த நாட்டு மக்களின் கண்களில் பார்க்கிறேன். இந்த முறை தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அந்த பிரகாசம். கடந்தமுறை மக்களின் கண்களில் தெரிந்த ஒளி, காங்கிரஸ் ஆட்சியின் மீதான சிவப்பு பொருந்திய கோபத்தின் வெளிப்பாடு. இந்தமுறை அதுவே நிலவின் குளுமையுடன், மோடி தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆசிர்வாதமாக இருக்கிறது அவர்களது கண்களில் காணப்படும் ஒளி.
ராகுல் சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: நீங்கள் பணமதிப்பிழப்பு பற்றி பேசியபோது மக்கள் உங்கள்புறம் இருப்பதாக சொன்னீர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி: உங்களுக்கு டீ வேண்டுமா?
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: உங்களுக்கு நான் பரிமாற உதவுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி: நான் இதில் நிபுணத்துவம் பெற்றவன். (கைகளில் கெட்டிலை எடுக்கிறார்…சிரிப்பு)
ராகுல் சிவ்ஷங்கர்: நன்றி. பணமதிப்பிழப்பின்போது மக்கள் உங்கள் புறம் இருந்ததாக சொன்னீர்கள். எந்தவித பிரச்சினையையும் அவர்கள் எதிர்கொண்டிருந்தாலும், பணமதிப்பிழப்பு வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தாகவும், பொருளாதார வளர்ச்சியை பாதித்ததாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தில் நாம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. மக்களுக்கு நீங்கள் கொடுப்பதா சொன்ன 10 கோடி வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படாத போது, அவர்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
பிரதமர் நரேந்திர மோடி: முதல் விஷயம் பணமதிப்பிழப்பு. இந்த கேள்வியை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு உள்ளது. தங்களுடைய பணத்தை இழந்தவர்கள், பணத்தின் மீதே படுத்துறங்கியவர்கள், தங்களுடைய இடங்களில் பணத்தை நிரப்பி வைத்திருந்தவர்கள் இவர்களுடைய பார்வையில் நீங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அளவிடக்கூடாது. இதை அளவிடவேண்டும் என்றால், ஏழை மக்கள், கடின உழைப்பாளிகள், வாழ்க்கை முழுவதும் உழைத்தும் கண்களால் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை கண்டிராதவர்கள், அவர்களுடைய பார்வையிலிருந்துதான் நீங்கள் பார்க்க வேண்டும். அரசாங்கத்திற்காக 20 ஆண்டுகள் உழைத்த ஒரு அதிகாரி, இன்னும் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருப்பவர், தனது குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்; அவருடைய பார்வையில் நீங்கள் இதை அளவிட வேண்டும்.
அவர் தன்னுடைய குழந்தைகளை அதே மாநிலத்தில் உள்ள, ஒரு சிறிய நகரத்தில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு விடுமுறைக்கு அழைத்துச் செல்வார். அதே நிலைமையில் இருக்கும் அவருடைய எதிர்வீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய குழந்தைகளை அதிக வசதியுள்ள பள்ளிகளில் படிக்க வைப்பார்; காரில் அழைத்துச் செல்வார்; சிறந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வார்; விடுமுறைக்கு துபாய் அல்லது சிங்கப்பூருக்கு செல்வார். பணமதிப்பிழப்பை அந்த சைக்கிளில் செல்லும் அதிகாரியின் பார்வையில் அணுகுங்கள். அந்த பார்வையில் நீங்கள் பார்க்கும்போது, அந்த முடிவின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும். பணத்தை இழந்தவர்களின் கண்களில் இன்னும் ஈரம் காயவில்லை; ஆனால், ஏழைகளின் கண்களில் ஒரு ஒளியை என்னால் காண முடிகிறது.
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: மோடி அவர்களே. எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து நின்றனர். மூன்று வருடங்கள் கடந்த நிலையில், அவர்களுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்து உங்களுடைய முடிவு சரி என்று சொல்ல உங்களால் முடியுமா?
பிரதமர் நரேந்திர மோடி: நிறைய யோசனைகளுக்கு பிறகே நான் அந்த முடிவை எடுத்தேன். நாட்டின் நலனுக்காகவும், என் மேல் மக்களின் நம்பிக்கைகாகவும், அவர்கள் என் நேர்மையின் மீது வைத்த நம்பிக்கைக்காகவுமே நான் இந்த முடிவை எடுத்தேன். இந்த முடிவிற்கு பிறகு அவர்களுடைய நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது. அதைப்பற்றி கேள்வி எழுப்ப எதிர்த்த ஒருவருக்கும் என் கண்களைப் பார்த்து கேட்க துணிவில்லை என்பதே உண்மை.
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: யாரெல்லாம் உங்களுக்கு போட்டியானவர்கள்? ராகுல் காந்தியா? மம்தா பானர்ஜியா? அகிலேஷ் யாதவ் அல்லது மாயாவதியா? இல்லை சந்திரபாபு நாயுடுவா? யார் உங்களுக்கு சவாலானவர்?
பிரதமர் நரேந்திர மோடி: மோடியின் மிகப்பெரிய சவால் மோடி மட்டுமே. என் வாழ்நாள் முழுவதற்கும் எனக்கு நானே சவால்களை உருவாக்கிக் கொண்டுள்ளேன். நிறைய செய்ய முடியும் என்னும்போது நான் ஏன் என்னை கொஞ்சத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று யோசித்துள்ளேன். நிறைய நடக்க முடியும்போது ஏன் ஓரிடத்தில் நிறுத்த வேண்டும்? எப்போதுமே பெரிதாக நினைக்க வேண்டும். மோடி எப்போதுமே தன்னையே சவாலாக நினைப்பவர். தன்னையே தாண்டிச் செல்லும் முனைப்புடன் செயல்படுபவர். மோடி ஒவ்வொரு நொடியும் தன்னை மேம்படுத்திக் கொள்பவர். அடுத்த ஐந்து வருடங்களுக்கும் எளிய மக்களுக்காக எப்படி வேகமாக உழைக்க வேண்டும் என்று என்னை நானே சவாலுக்கு உட்படுத்திக்கொண்டு இருக்கிறேன். செயல்களை எப்படி வித்தியாசமாக செய்ய வேண்டும்? அடுத்த ஐந்து வருடங்களுக்கு உலகில் இந்தியாவை எப்படி மேம்படுத்த வேண்டும்? இதுதான் மோடிக்கான சவால் இப்போது. மோடி எப்போதும் தன்னையே சவாலாக எடுத்துக்கொள்வார், இனியும் கூட.
ராகுல் சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: நீங்கள் உங்களையே கேள்வி கேட்டுக்கொண்ட போது, உங்களுடைய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட போது, நீங்கள் சொன்ன தரப்பில் இருந்து பணமதிப்பிழப்பிற்கு எதிர்ப்பு கிளம்பிய போது, எளிய மக்களில் பலரும் இந்த சரியான தீர்மானமற்ற முடிவு, பல சிறு, குறு தொழில்களை பாதித்ததாக சொன்னார்கள். கருப்பு பணம் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற உங்களின் இந்த முடிவு, ஆனால் பெரியளவிலான சேதம் குறித்து நீங்கள் உங்களைக் கேட்டுக் கொண்டுள்ளதுண்டா?
பிரதமர் நரேந்திர மோடி: கடந்த 3 முதல் 4 நூற்றாண்டுகளாக மக்களுக்கு ஊறு விளைவித்து வந்த ஒரு பிரச்சினை, சில நாட்களுக்கு கடினமாக இருக்கும் என்பதையும் நான் அப்போதே மக்களிடம் தெளிவாக சொல்லியிருந்தேன். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்காலத்தில் பயனளிக்க கூடிய ஒன்று, வருகின்ற தலைமுறைகளுக்கு நம்பிக்கை அளிக்ககூடியது என்று கூறியிருந்தேன். இடைத்தட்டு மக்களின் விருப்பங்கள் நிறைவேறிவிட்டன. ஏழை மக்களும் நிறைவடைந்துள்ளனர். அவர்களுக்கும் எங்களுடைய முடிவின் முக்கியத்துவம் தற்போது தெரிந்துள்ளது. அதனால்தான் சொல்கிறேன், இதற்கெதிரான கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல். பணத்திலேயே மிதந்த, தற்போது அதை இழந்துவிட்ட சுயநலவாதிகளின் கருத்துக்கள் அவை.
ராகுல் சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: நாட்டில் மக்கள் இருவிதமான ஆட்சி முறை இருப்பதாக கூறுகின்றனர். ஒன்று மோடி ஸ்டைல் ஆட்சிமுறை, மற்றொன்று காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ராகுல் உறுதியளித்திருக்கும் ஸ்டைல் ஆட்சிமுறை. அவர் நாங்கள் மக்களை இணைப்போமே தவிர பிரிக்க மாட்டோம்; மோடி ஆட்சி தராத விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை நாங்கள் தருவோம் என்று உறுதியளிக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
பிரதமர் நரேந்திர மோடி: முதலில் நான் உங்களுக்கும், டைம்ஸ் நவ்விற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மிகப்பெரிய அரசியல் நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள் கூட இதுவரை யோசிக்காத ஒரு கேள்வியைக் கேட்டதற்கு. இதை நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன். சுதந்திரத்திற்கு பிறகு நமது நாட்டில் பல்வேறு விதமான ஆட்சிமுறைகள் இருந்தன. அதை பொருளாதார நிபுணர்களும், அரசியல் வல்லுனர்களும் யோசித்து பார்க்க வேண்டும். அதில் ஒரு முறைதான், திரிபுரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் நடப்பது. இரண்டாவது, காங்கிரஸின் கருத்துக்களையே கொண்டிருந்தாலும் அதிலிருந்து பிரிந்தவர்களால் நடப்பது. குடும்ப அரசியலும், பிராந்திய அரசியலும் அதில் ஒரு பிரிவு, அவர்கள் தங்களுக்கென ஒரு குழுமுறையை வைத்துள்ளனர்.
மூன்றாவது காங்கிரஸ், நான்காவது பாஜக. இந்த நான்கு ஆட்சி முறைகளை இந்தியா பார்த்து வருகிறது. ஒரு நூறு முக்கிய அளவுகள் அடிப்படையில் இந்த நான்கு ஆட்சிமுறைகளும் மதிப்பிடப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது செயல்முறை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கருத்துபகிர்தல் அடிப்படையில் அல்ல. இரண்டாவதாக அவர்களது வேலை கலாச்சாரம், கோட்பாடுகள், தலைமை குணங்களும் மதிப்பிடப்பட வேண்டும். யாருடைய முகம் அதிகமாக டிவியில் வருகிறதோ, செய்தித்தாளில் வருகிறதோ அதனடிப்படையில் அல்ல. நீங்கள் கேட்ட கேள்விகளின் அடுத்தகட்ட நடவடிக்கை இவையாக இருந்தால், இந்த நாடு பெரும் நன்மையை அடையும்.
மகாத்மா காந்தியின் கோட்பாடுகளின் அடிப்படையில், எளிய மனிதர்களுக்கு நன்மையளிக்க கூடிய முடிவுகளையே நாங்கள் எடுக்கிறோம். தேர்தலுக்காக நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை. தேர்தலில் ஜெயிப்பதற்காக மட்டும் நாங்கள் ஆட்சி நடத்துவதில்லை. நாங்கள் இந்த ஆட்சியை நாட்டிற்காகவே நடத்துகிறோம்; எங்கள் கட்சிக்காக அல்ல. இதுவே எங்களுடைய மிகப்பெரிய பலம். நாங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் நாட்டிற்கானவையே. நாங்கள் எது செய்தாலும் அது இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கானவையே.
இந்த சமுதாயத்தில் இருக்கும் ஏழை மக்களின் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்க்க வேண்டும். அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்ககூடிய பலம் நம்மிடம் இருக்கிறது. முன்பு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது பெரும் பிரச்சினைகள் உருவாகின. ஆனால், நாங்கள் எடுத்தபோது எந்தவொரு கலவரமும் இதனால் ஏற்படவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தின்போது, மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கரையும், பீகாரில் இருந்து ஜார்க்கண்டையும், உத்திர பிரதேசத்தில் இருந்து உத்திரகாண்டையும் உருவாக்கினோம். அவை வளர்ச்சிக்கான படிகளில் நம்மை ஏற்றின. ஆந்திரா மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரிந்தது; ஆனால் அங்கு இன்னும் மக்களுக்கு திருப்தி இல்லை. ஒரு செயலை செய்வதில் இருக்கும் வித்தியாசம் இது. மற்ற விஷயங்களில் இதை நீங்கள் காணலாம்.
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: நீங்கள் ஆந்திராவைப் பற்றி பேசினீர்கள். ஏழை மக்களுக்காக நீங்கள் முடிவுகளை எடுப்பதாக கூறினாலும், இன்று வரை கருப்புப் பணம் ஒழியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். இந்தமுறை தேர்தலின்போது எக்கச்சக்கமான பணம் பிடிப்பட்டுள்ளது. சிலர் இந்தமுறை நீங்கள் பெரும்பான்மையுடன் வரமுடியாது என்கின்றனர். சிலர் ஜகன் மோகன் ரெட்டி ஆந்திராவிலும், கேசிஆர் தெலுங்கானாவிலும் என்று கூறுகின்றனர்.
பிரதமர் மோடி: இதில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. முன்பெல்லாம், கருப்பு மணி ஒழிப்பது நடக்காத ஒன்று; ஊழல் இல்லாமல் வாழ்க்கை நடக்காது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று மக்கள் நேர்மையுடன் வாழ முடியும் என்று தெரிந்து கொண்டுள்ளனர். புதிய மத்திய பிரதேச அரசு வந்த சில மாதங்களிலேயே, பல தவறுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது மொத்த சூழலும் நேர்மையாக மாறியதால்தான். இல்லையென்றால் இது சாத்தியமில்லை.
இரண்டாவது, தேர்தலுக்கு பிறகான முடிவுகள்? முன்பை விட இந்தமுறை பாஜக முழு மெஜாரிட்டியுடன் வெல்லும். எங்களுடைய வாக்குகளும் எல்லா மாநிலங்களிலும் அதிகரிக்கும். மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில், எங்களுடைய வேலைகளின் ரிசல்ட் எங்களுக்கு தெரிகிறது. இந்த நாடு ஒரு வலிமையான ஆட்சியை, முழு மெஜாரிட்டியுடன் முடிவாக்கும். இந்த நாடு பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுக்கும்.
ராகுல்சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: நாங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்க வேண்டும். சில நேரங்களில் அவை தவறாக இருந்தாலும் கூட, கடந்த 2014ம் ஆண்டு நீங்கள் வென்ற 90% இந்தி பேசும் பகுதி சீட்கள், இந்தமுறை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்கிறது. இதற்கு ஈடு செய்ய நீங்கள் முயல வேண்டும். மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற உங்கள் முயற்சிகள் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி: நாங்கள் மேற்கு வங்காள அரசியலில் கவனம் செலுத்துகிறோமா என்பதே தவறானது. நாடு முழுவதுமே வளர்ச்சி பெற வேண்டும் என்றே 2013ம் ஆண்டில் நான் கூறினேன். மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்,. டெல்லி, பஞ்சாப் போன்றவை பொருளாதார வளர்ச்சியில் ஈடுபடுபவை. ஆனால், கிழக்கில் இயற்கை வளங்கள் அதிகம்; மேன்பவர் அதிகம். மேலும் நிறைய யோசனைகளும் உண்டு. கிழக்கு இந்தியாவை நான் மேலும் முன்னேற்ற விரும்புகிறேன். நிறைய வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறேன். மேற்கு இந்தியாவைப் போலவே அவர்களும் நிறைய வாய்ப்புகளைப் பெற வேண்டும். கொல்கத்தா இதற்கான தலைமையிடமாக மாற வேண்டும்.
அது நடக்கவில்லை என்றால் இந்த கனவு நிறைவேறாது. மேற்கு வங்காளம் மற்றும் கொல்கத்தா, கிழக்கிந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும் சாவிகள். மற்றவர்கள் அவர்களுடைய வாக்கு எண்ணிக்கையையே பார்த்தார்கள். ஆனால், நாங்கள் வங்காளத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.
ராகுல் சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: மேற்கு வங்காளத்தில் தேர்தலின்போது கலவரம்.
நரேந்திர மோடி, பிரதமர்: ஜம்மு காஷ்மீர்ல் இந்தமுறை எந்தவித கலவரமும் இல்லை. ஆனால், வங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் எத்தனையோ பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு பாஜக தொண்டரும் உயிரிழந்துள்ளார். அதைப்பற்றி செய்திகள் வாய் திறக்கவில்லை.
1980களில் காஷ்மீர் எந்தவழியில் சென்றதோ அதில்தான் வங்காளமும் தற்போது செல்கிறது. இதை நாம் மிகத்தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
நவிகா குமார்: உத்திர பிரதேசத்தில் கத்பந்தனில் நீங்கள் உறுதியாக உள்ளீர்களா?
பிரதமர் நரேந்திர மோடி: ஒவ்வொரு முறையும் நான் அதைத்தான் திரும்ப உறுதியுடன் சொல்வேன். 10 செய்தியாளர்கள் கேட்டாலும் அதே பதில்தான். 1000 முறை கேட்டாலும் அதேதான்.
ராகுல்சிவ்ஷங்கர்: ஆனா எத்தனை இடங்கள் நீங்கள் வெல்வீர்கள்?
பிரதமர் நரேந்திர மோடி: இளைய வாக்காளர்கள் வித்தியாசமாக யோசிக்கின்றனர். பெண்களும் சுயமாக வாக்களிக்கின்றனர். நாடு ஒரே மாதிரி இருப்பதில்லை; காலம் மாறிவிட்டது.
ராகுல்சிவ்ஷங்கர்: உங்களால் அனுமானித்துக் கூற இயலாதா?
பிரதமர் மோடி: நான் ஒரு ஜோசியக்காரன் அல்ல. நான் அரசியல் அறிவியல் மாணவன். நாட்டின் கிராமங்கள் வழியாக நான் பயணித்துள்ளேன். நான் மட்டுமே நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் நேரடியாக களம் கண்டிருக்கும், உழைத்திருக்கும் அரசியலாளன். எனக்கு, உண்மை தெரியும்.
ராகுல்சிவ்ஷங்கர்: புல்வாமா பற்றி பேசலாம். புல்வாமாவில் நடைபெற்றது மிகவும் துயரமானது. அதற்கான உங்கள் முடிவுகள்? எப்படி செய்தீர்கள்?
பிரதமர் நரேந்திர மோடி: அந்த தாக்குதலுக்கு பிறகு எந்தவொரு உண்மையான இந்தியனும் சும்மா இருக்க மாட்டான். இரண்டு காரணங்கள். ஒன்று உடனடியான கோபம். அந்த முறை அமைதியாக இருந்திருந்தால், இந்த ஆட்சி வலிமையானதல்ல என்று முடிவு கட்டியிருப்பார்கள். 26/11 மும்பைக்கு பிறகே ஒழுங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த புல்வாமா தாக்குதலே நடைபெற்றிருக்காது. தேர்தலுக்காக நம் நாட்டை பலி கொடுக்க முடியாது. தேர்தலுக்காக நம்முடைய ஜவான்களில் உயிரை துச்சமாக்க முடியாது. இதுதான் என் கோட்பாடு.
ராகுல்சிவ்ஷங்கர்: பாலகோட் தாக்குதல் நீங்கள் வெற்றிபெற்றதால்தான் நடைபெற்றது என்று சொல்பவர்களுக்கான பதிலா இது?
நரேந்திர மோடி: அவர்களுடைய நினைப்பின் எதிரொலி இது. தேர்தல், அரசியலை விட நாட்டின் கொள்கைகள் முக்கியம் என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்களுடைய புரிதலைவிட பெரியது இது. அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது. ஆனால், 40 ஜவான்களின் தியாகம் நம் நாட்டிற்கு காத்திருக்கும் அபாயத்தை எடுத்துக் காட்டியது. அதற்கு உரிய பதில் கிடைத்தே ஆகவேண்டும். தினசரி தீவிரவாதிகள் கொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கடந்த வருட ஆட்சிகளில் இது கிடையாது.
ஊரி தாக்குதலுக்கு பிறகாகவே நான் நேரம் வந்துவிட்டத்தை உணர்ந்தேன். தீவிரவாதிகளின் இடம், ஆயுதப்பயிற்சி ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தேன். பாகிஸ்தான் மக்களை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஊறு விளைவிக்காமல், தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து நாங்கள் தாக்குதலை நடத்தினோம். பாலகோட் ஒரு சிறப்பான சம்பவம். நம்முடைய ராணுவத்தை அது உற்சாகம் கொள்ள வைத்தது. இனிமேல் ஒரு தாக்குதலுக்கு முன்னர் 50 முறையாவது தீவிரவாதிகள் யோசிப்பார்கள்.
நவிகா குமார்: பாலகோட் தாக்குதலுக்கு சாட்சி கேட்ட மக்களுக்கும், எதுவும் நடக்கவில்லை என்றவர்களுக்கும், சில மரங்கள் மட்டுமே பலியாகின என்றவர்களுக்கும் உங்கள் பதில் என்ன?
பிரதமர் மோடி: அவர்கள் நம் நாட்டில் இருந்துகொண்டே பாகிஸ்தானை புகழ்பவர்கள். அவர்கள் ஏன் பாகிஸ்தான் மொழியை பேசுகின்றனர்? என்ன வகையான குணாதிசியம் இது? பாகிஸ்தானே ஒத்துக்கொண்ட போதும், இவர்கள் பாகிஸ்தானின் பங்கு எதுவுமில்லை என்கிறார்கள். நம் நாட்டினரே இப்படி கேட்பது வருத்தமளிக்கிறது. முதலில் ப்ரூப் கேட்பவர்களுக்கு, ஏர்ஸ்ட்ரைக்கை முதலில் அறிவித்தது யார்?
நவிகா குமார் மற்றும் ராகுல் சிவ்ஷங்கர்: பாகிஸ்தான்
பிரதமர் நரேந்திர மோடி: பாகிஸ்தான். எதுவுமே நடக்கவில்லை என்றால் அவர்கள் ஏன் முதலில் அறிவிக்கிறார்கள்? இரண்டாவதாக, ஊரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு பிறகு, பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கு 24 மணி நேரத்தில் எதுவும் நடக்கவில்லை, 250 கிலோமீட்டர் தொலைவில் என்று காட்டியது. அது எளிது. ஆனால், பாலகோட் ஏர்ஸ்ட்ரைக்கில் 43 நாட்களுக்கு அங்கு நுழையவே மீடியாவை அனுமதிக்கவில்லையே ஏன்? சாதாரண மக்கள் கூட அங்கு நுழைய முடியவில்லை. ஏன்?
மூன்றாவதாக, பாகிஸ்தானின் அறிவிக்கைகளைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் பிரதமருடன் பேச வேண்டும் என்றார்கள், அவர்களுடைய எஃப்-16 சுடப்பட்டதை இந்திய விமானம் என்றார்கள். அதில் இறந்த பைலட்டை இந்திய பைலட் என்றார்கள். எதற்காக நாம் பாகிஸ்தானை நம்ப வேண்டும்? உண்மையான கடினச்சூழல் என்னவென்றால், இந்தியாவில் வாழும் மக்களே இந்தியாவை நம்புவதில்லை என்பதுதான். இந்திய படையினர் மீது நம்பிக்கையில்லை. இந்திய ஜவான்கள் மீது நம்பிக்கையில்லை. ஆனால், அவர்கள் பாகிஸ்தானின் அறிக்கையை நம்புகின்றனர்.
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: இந்த பிரச்சினைகளில் தீவிரமாக இருக்கும் நீங்கள், தீவிரவாத தாக்குதலில் சமரசம் செய்து கொள்ளாத நீங்கள் மெகபூபா முக்தியுடன் ஜம்மு காஷ்மீரில் கூட்டணி வைத்தவுடன் சமரசம் செய்து கொண்டது எப்படி என்கின்றனர் மக்கள். அவருடைய கோட்பாடுகள், நிலைமை தெரிந்தும் அவருடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். இது தவறில்லையா?
பிரதமர் நரேந்திர மோடி: ஜம்மு காஷ்மீரில் பெருமளவு சீட்களை வென்றிருந்தாலும், தனியாக ஆட்சியமைக்க முடியாத நிலையில் இருந்தோம். அதைக் கேட்க கூட முடியாத நிலையில் இருந்தோம். பிடிபி-என்.சி மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கப்பட்டது. நாங்கள் எதிர்க்கட்சியினர் ஆனோம். சில மாதங்கள் கவர்னர் ஆட்சியில் இருந்தது அந்த மாநிலம். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அதனாலேயே, அவர்கள் அந்த திட்டத்தை முன்வைத்தனர். மாநிலத்தின் நல்லாட்சி மட்டுமே எங்கள் விருப்பமாக இருந்தது.
தற்போது, வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக அங்கு நடைபெற்று வருகின்றன. ரோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் விரைவாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எளிய மனிதர்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதே அங்கு எங்களுடைய முக்கிய திட்டம்.
ராகுல் சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெடுப்புகளை ஊக்குவிக்கும் நீங்கள், ஒரு தீவிரவாத குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா தாக்குரை திக்விஜய் சிங்கிற்கு எதிராக போபாலில் நிறுத்தியிருக்கிறீர்கள். ஹிந்து-முஸ்லிம் பற்றி பேசும் பிரிவினைவாதியாக மக்கள் அவரை பார்க்கிறார்களே?
பிரதமர் நரேந்திர மோடி: 1984ம் ஆண்டில் இந்திரா காந்தி இறந்தபோது, ஒரு பெரிய மரம் சாய்ந்ததாக தெரிவித்தார். அதன்பிறகு 1000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அது தீவிரவாதம் இல்லையா? ஆனால், அதற்கு காரணமானவர் பிரதமர் ஆக்கப்பட்டார். மைய மீடியா இதுபற்றி கேள்வி எழுப்பவுமில்லை. அதில் பலரும் எம்பிக்களாகவும், கேபினட் மினிஸ்டர்களாகவும், சமீபத்தில் மத்திய பிரதேச முதல்வராகவும் இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் பதவி வகிக்கின்றனர். ஆனால், போபால் பாஜக வேட்பாளருக்கு, ஒரு பெண்ணான சாத்விக்கு ஒரு விரலை கூட யாரும் உயர்த்தவில்லை.
ராகுல் சிவ்ஷங்கர், தலைமை ஆசிரியர்: உங்கள் ஆட்சி 10 கோடி வேலைவாய்ப்புகளை ஐந்து வருடங்களில் உருவாக்குவதாக சொன்னது.
பிரதமர் நரேந்திர மோடி: இந்த நாடு எண்களால் நடப்பது இல்லை. இதற்கான பதிலை நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறேன்.
ராகுல் சிவ்ஷங்கர்: ஆனால், மோடி சார், இந்த கேள்விக்கு ஏன் எங்களுக்கு தெளிவான எண்ணிக்கை கிடைக்கவில்லை?
பிரதமர் நரேந்திர மோடி: கடந்த 70 ஆண்டுகளில் இதற்கான தெளிவான டேட்டாவிற்கான மெக்கானிசம் எதுவும் உருவாக்கப்படவில்லை. அது விரைவில் உருவாகும்.
நவிகா குமார்: ஆனால், மோடி சார், தேர்தலில்….
பிரதமர் நரேந்திர மோடி: ஆனால், நம் நாட்டில் 80%க்கும் அதிகமான அளவில் முறைசாரா பொருளாதாரமும், முறைசாரா வேலைவாய்ப்புகளும் உள்ளன. 15-16% மட்டுமே முறையான எண்ணிக்கை அடிப்படையிலானவை. அந்த 80% அறிந்துகொள்ள ஒரு சிறப்பான வழிமுறை தேவை.
ராகுல் சிவ்ஷங்கர்: ஏனெனில், அந்த எண்ணிக்கைகள் சேகரிக்கப்படவில்லை.
நரேந்திர மோடி, பிரதமர்: ஆனால், அவர்களும் சம்பாதிக்கின்றனர். ஆனால், அது முறையாக பதிவில் இல்லை அவ்வளவுதான்.
நவிகா குமார், நிர்வாக ஆசிரியர்: தேர்தல் நேரம் இது. நிறைய வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் எதிர்க்கட்சிகளை குறிவைத்தே நடக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி: தேர்தல் ஆணையமே தேர்தல் கால நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. தேர்தல் விதிகள் அடிப்படையிலேயே அவை முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு கார் விபத்துக்குள்ளாகும் போது அதில் இருப்பது ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி என்பதால் அவர் சூப்பர் ஹூயூமன் ஆகிவிட முடியுமா? நடைமுறை மற்றும் சட்டப்படி நடப்பதையே தேர்தல் ஆணையம் முன்னெடுக்கிறது. அதில் எங்களுக்கு எந்த பங்குல் இல்லை. மேலும், அதுபோன்ற சோதனைகளில் சான்றுகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்ற என்பதுதான் உண்மை.
இந்த சோதனைகள் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையானவை. அதில் எக்கச்சக்கமான கணக்கில் வராத பணமும் சிக்குகிறது. மத்திய பிரதேசத்தில் மீட்கப்பட்ட பணம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக ஒதுக்கப்பட்டது. அதை தின்று தீர்க்க முயன்றவர்களிடம் இருந்துதான் அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யார் மீது வருமான வரிச்சோதனை நடைபெறுகிறது என்பதை விடுங்கள். ஆனால், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுவது உண்மைதானே?