ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை என்றால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்வதா என தம்மீதான புகார் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய தமது வங்கிக் கணக்கில் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் (30 வயது மதிக்கத்தக்கவர்) ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னிடம் பாலியல் ரீதியாக அணுகியதாகக் கூறியதாக இணைய ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. அந்தப் பெண் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் என்ற பதவியில் இருந்தபோது ரஞ்சன் கோகோய் அவ்வாறு தொந்தரவு அளித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தலைமை நீதிபதியின் பாலியல் தொந்தரவு குறித்து கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அவர் எழுதியதாகவும் அதன் பின்னர் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளாகிவருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற ஊழியர் தெரிவித்த பாலியல் புகார் இன்று சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த சிறப்ப அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும் இடம்பெற்றிருந்தார். அவரைத் தவிர அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகிய நீதிபதிகளும் இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரும் இருந்தனர்.
ஒரு நபர் ஏன் நீதிபதியாக வேண்டும் என்ற லட்சியம் கொள்கிறார் தெரியுமா? நற்பெயர்.. ஒரு நீதிபதிக்கு இது மட்டுமே பெரிது. அந்த நற்பெயர் மீதே தாக்குதல் நடக்குமாயின் வேறு என்ன மிச்சம் இருக்கிறது? என்று ரஞ்சன் கோகோய் தன் மீதான பாலியல் புகார் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
ரஞ்சன் கோகோய் மீது பெண் ஒருவர் அதுவும் உச்ச நீதிமன்ற பெண் ஊழியரே பாலியல் புகார் கூறியதாக சில் ஆன்லைன் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “இதை நம்பமுடியவில்லை. என் மீதான இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளை நான் மறுத்துப் பேசுவதுகூட என் தகுதியில் இருந்து கீழே இறங்குவதற்கு சமமானது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான பொறுப்பு என்னிடமே இருக்கிறது. இந்த அசாதரணமான நடவடிக்கையைக் எடுக்க விஷயம் வெகு தூரம் சென்றுவிட்டதே காரணம்.
இருப்பினும், என் மீதான இந்தப் புகார்களை நான் விசாரிக்கப்போவதில்லை. மற்ற மூத்த நீதிபதிகள் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்வார்கள். உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது நீதித்துறைக்கான அச்சுறுத்தல். அதற்காக நீதித்துறையை பலிகடா ஆக்க முடியாது. நான் எனது பதவி வரையறைக்கு உட்பட்டு நீதித்துறைக்கான கடமைகளை தொடர்ந்து செய்வேன்.
20 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய பின்னரும்கூட எனது வங்கிக் கணக்கில் ரூ.6 லட்சத்து 80,000 மட்டுமே உள்ளது. என் மீது ஊழல் புகார் சொல்ல இயலாதவர்கள் வேறு ஏதாவது புகார் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பின்னணியில் மிகப் பெரிய சக்தி உள்ளது, தலைமை நீதிபதியின் மாண்பை சீர்குலைக்க விரும்பும் சக்தி அது. என் மீது புகார் தெரிவித்த ஊழியருக்கு கிரிமினல் பின்னணி உள்ளது. அவர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளே உள்ளன. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும்” என்றார்.
அமர்வில் இருந்த நீதிபதி சஞ்சீவி கண்ணா கூறும்போது, எவ்வளவு அசவுகரியமான வழக்கு என்றாலும் கூட அதிலிருக்கும் உண்மையைக் கண்டறிவதுதான் நீதிப் பணியின் மாண்பு.
ஆனால், இதுபோன்ற ஆதாரமற்ற புகார், அடிப்படையற்ற செய்தி பிரசுரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விலங்காக அமைந்துவிடுகிறது. நீதித்துறை நெருக்கடிக்கு உட்படுத்தப்படக் கூடாது. நீதிபதிகள் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் உணரக் கூடாது” என்றார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்ற சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது தலைமை நீதிபதி மீதான இந்தப் புகார் மிரட்டல் உத்தி என்றார். இந்த வழக்கில் சிறப்பு அமர்வு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.