அரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை?: செம்பரிதி

“அதிமுக என்ற கட்சி விரைவில் காணாமல் போய்விடும்”

அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் கூறிய இந்தக் கருத்து பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை.

டிடிவி தினகரன் அப்படித்தானே சொல்வார் என பொதுவெளியில் படர்ந்து படிந்துள்ள பார்வை அதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால், அதிமுக என்ற அரசியல் கட்சி காணாமல் போவது, இத்தனை காலமும் அதனை நம்பி ஏற்று, அதனுடன் கட்டிப்புரண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த அடிமட்டத் தொண்டனுக்கு பெரும் வாதையாகவே இருக்கும்.

திரைச்செல்வாக்கும், அரசியல் சாயையும் இரண்டறக் கலந்து உருவான எம்ஜிஆர் என்ற கதம்ப ஆளுமையால் வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான அரசியல் உலகம்தான் “அனைத்திந்திய” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

சமூகநீதி, சாதிமறுப்பு, தமிழ் உணர்வு என, திமுகவில் இருப்பதைப் போன்ற சித்தாந்த சிடுக்குகள் அற்ற சிங்கார மேடையாகத்தான் அதிமுகவை எம்ஜிஆர் கட்டமைத்தார்.

திமுகவும் அதன் தலைவராக கலைஞரும் எம்ஜிஆரிடம் தோற்க நேர்ந்த இடம் இதுதான்.

சரோஜாதேவி, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா, லதா, ராதாசலூஜா என, தன்னுடன் கரம் கோர்த்து ஆடிய கனவுக் கன்னியர் அனைவரும்  வந்து நடமாடிச் செல்லும் அந்தரங்க மேடைதான் அதிமுக தொண்டனின் மனவுலகம் என்பதை மிகச் சரியாகவே புரிந்து வைத்திருந்தார் எம்ஜிஆர்.

எனவேதான், அதற்கேற்ற லாவகத்துடன் பெரிய தத்துவார்த்தச் சிக்கல்கள் இல்லாத தக்கையான அரசியல் வடிவத்தை அவர் முன்னெடுத்தார்.

திரைப்படத்தில் நம்பியார் நடித்த கதாபாத்திரத்தில், திரைக்கு வெளியே தனது ரசிகர்களின் மனவெளியில் கலைஞர் கருணாநிதியை கச்சிதமாக பொருத்தி, அதில் வெற்றியும் கண்டார் எம்ஜிஆர்.

சென்னை ராபின்சன் பூங்காவில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தவிர்க்க முடியாத சமூகக் கடப்பாடும் (Social commitment), அதற்குரிய திடமான, தெளிவான சித்தாந்த முழக்கங்களும் இருந்தன.

ஆனால், அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவரால் தொடங்கப்பட்டு, பின்னர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக எம்ஜிஆரால் சுவீகரிக்கப்பட்ட கட்சிக்கோ, கலைஞர் எதிர்ப்பு என்பதைத் தவிர, பெரிய அளவில் வேறு எந்தக் கொள்கையும் இல்லை. முழக்கமும் தேவைப்படவில்லை.

அதன் காலம் முழுவதும் இன்றுவரை கலைஞர் எதிர்ப்பு என்பதே அதிமுகவின் முழுமுதல் பாடுபொருளாகவும், முழுமையான முழக்கமாகவும் இருந்தது. இருந்து வருகிறது.

திமுக தொடங்கப்பட்ட போது அந்த இயக்கத்திற்கான கொள்கைப் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் திமுக அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய அரசியல் பயணத்திற்கான வேலைத் திட்டம் ஓரளவு தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.

அதிமுக சார்பாகவும் கூட அப்படி ஒரு கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்ணா தி.மு. கழகம் பின்பற்றும் சமூக, பொருளாதார அரசியல் கொள்கை “அண்ணாயிசம்” என்று அழைக்கப்படும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த “அண்ணாயிசம்” என்ற சொல்லை, எம்ஜிஆருக்கும் அடுத்தடுத்து ஜெயலலிதா, ரஜினி போன்றோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்த சோ.ராமசாமி, தாம் நடித்த திரைப்படங்களில் கிண்டலடித்திருப்பதைப் பார்க்க முடியும்.

அதிமுகவின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டின் முதல் பக்கமே கலைஞர் கருணாநிதி மீதான விமர்சனத்துடன் தான் தொடங்குகிறது.

“பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பின்னால் அவர் வகுத்த வழிகளை, கோட்பாடுகளை, நிகழ்ச்சி நிரல்களை, கொள்கைத் திட்டங்களை, அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்கள் அழித்தனர். திசை மாறிப் பயணம் மேற்கொண்டனர். லஞ்ச ஊழல்கள் மலிந்தன. இதை திமுகவின் பொருளாளாராக இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தட்டிக் கேட்டார்…” என்பதாக அதிமுகவின் அந்தக் கொள்கை விளக்கம் நீள்கிறது.

கருணாநிதி என்ற தனிமனிதரை எதிர்த்தும், மிக, மிக சுயமான காரணங்களுக்காகவும் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டதுதான் அதிமுக என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பின்னர், எம்ஜிஆரே அதில் இருந்து பின் வாங்க நினைத்தாலும் கூட, உடன் இருந்த கும்பலின் அதிகாரப் பசிக்கு தீணி போட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டதால், அவரை அதிமுகவோ, அதிமுக அவரையோ கைவிட முடியாத கட்டாயம் உருவாயிற்று.

எனவேதான், அதிமுகவை, கலைஞர் கருணாநிதி என்ற ஆளுமையை எதிர்த்து உருவான ஒரு கும்பல் அரசியலின் திடீர் எழுச்சி என்ற எல்லையைத் தாண்டி மதிப்பிட முடிவதில்லை.

கால்நூற்றாண்டுக்கும் மேல் ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பைப் பெற்ற ஓர் அரசியல் கட்சியை வெறும் கும்பல் எழுச்சி எனச் சொல்லிவிட இயலுமா எனக் கேட்கலாம்.

எம்ஜிஆரின் திரைச் செல்வாக்கும், அதனால் கிடைத்த வசீகர வலிமையும் தேர்தல் அரசியல் வெற்றியை அவருக்கு சாத்தியப் படுத்தி இருக்கலாம்.

மொழி, இன அரசியல் குறித்தோ, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கோட்பாடு குறித்தோ, எம்ஜிஆருக்கு ஆழ்ந்த புரிதல் எதுவும் இல்லை என்பது பரவலாக அறியப்பட்ட உண்மை.

திராவிடக் கட்சி எனக் கூறப்படும் அண்ணா திமுக வின் பொதுச்செயலாளராக இருந்த எம்ஜிஆர், சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கைக்கு முற்றிலும் முரணாக, வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு என திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஒன்றே அவரைப் பற்றி அறிந்து கொள்ளப் போதுமானது.

மற்றபடி மொழி உரிமை, இனநலம், சமூகநீதி குறித்த தனித்துவமான கோட்பாட்டு புரிதலோ, கொள்கை முனைப்போ அதிமுகவுக்கு இல்லை என்பதை விளக்கத் தேவையில்லை.

திமுகவும், கலைஞர் கருணாநிதியும் எம்ஜிஆரின் பிம்ப அரசியலுக்கு லகானாக இருந்ததால், அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து பெரிய அளவு அவரால் பிறழ்ந்து போய் விட முடியவில்லை என்பதுதான் உண்மை. அதன் நற்பலனையும் கூட எம்ஜிஆரே அனுபவித்தார்.

எம்ஜிஆர் தலைமையில் கும்பல் அரசியலின் திறட்சியாக தொடங்கிய அதிமுக, அதன் வழியிலேயே பரிணமித்து ஜெயலலிதாவின் காலத்தில் அடிமைகளின் கூட்டமாக  உச்சத்தை அடைந்தது.

திரைச் செல்வாக்கால் பெறப்பட்ட எம்ஜிஆரின் தேர்தல் வெற்றியை, அவரது அரசியல் வெற்றியாக கொண்டாடித் தீர்த்த தமிழர்களின் அறிவு நிலை, உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.

முற்றிலும் தக்கையான இந்தப் பார்வையின் அடிப்படையில் தான், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை விமர்சகர்கள், நோக்கர்கள், ஆய்வாளர்கள் என்ற அடையாளத்துடன் விவாதிக்கும் பலரும் இன்றளவும் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

திமுகவையும் – அதிமுகவையும் சமதூரத்தில் வைப்பதாக பாவனை செய்து, இரண்டையும் திராவிட கட்சிகள் எனக் கூறி இணையாக தோற்றமளிக்க வைக்க முயலும் இவர்களது செயல்பாட்டின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.

திமுகவின் தத்துவார்த்த அடையாளத்தை மெல்ல, மெல்ல மங்கிப் போகச் செய்வதுடன், அதன் அறிவுத்தளத்தை அதிமுகவின் நிலைக்கு சரிய வைப்பதற்கான முயற்சியாகவும் தான் “திராவிடக் கட்சிகள்” என்ற விமர்சனச் சொல்லாடலே உருவாக்கப்பட்டது.

“கலைஞரையும் திமுகவையும் எதிர்க்க வேண்டிய நெருக்கடி வைதீக சார்புள்ள பலருக்கும் இருந்தது. அவர்களுக்கு எம்ஜிஆர் தேவைப்பட்டார்” என்பது மட்டும்தான் சுமார் அரைநூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றின் ஒற்றை வரிச் சுருக்கம்.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா வந்து அதிமுகவை கையகப்படுத்தினார்.

திமுகவுடனும் அதன் முதுபெரும் தலைவர்களுடனும் நீண்ட காலம் பிணைக்கப்பட்டிருந்தவர் என்பதால் எம்ஜிஆரிடம் இருந்த மிகச் சில குறைந்த பட்ச திராவிட அரசியல் சாயை கூட ஜெயலலிதாவிடம் இல்லை.

பின் எப்படி அவர் தலைமையிலும் அதிமுக வலிமையாக இருந்தது?

கருணாநிதி எதிர்ப்பு என்ற தீராத பாடுபொருள் மட்டுமே அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்க ஜெயலலிதாவுக்கும் போதுமானதாக இருந்தது.

எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த ஒரே ஒரு அழுத்தமான கருத்தொற்றுமையும் கூட கருணாநிதி எதிர்ப்பு என்பது மட்டும்தான். அதிமுகவுக்கான அந்தப் பாடுபொருளை ஜெயலலிதாவும் லாவகமாக பயன்படுத்தி வந்தார்.

ஜெயலலிதா மறைந்தார். அதன் பின்னரும் கூட அதிமுகவுக்குள் இருக்கும் குழப்பங்களை மறைத்தும், மறந்தும் கலைஞர் கருணாநிதியை விமர்சித்தே, மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியை, அக்கட்சியினர் கச்சிதமாக செய்து வந்தனர்.

அதிமுகவை உயிருடன் வைத்திருக்க ஏறத்தாழ அரை நூற்றாண்டுகாலம் பயன்பட்டு வந்த கலைஞர் என்ற அந்தப் பாடுபொருள் தீர்ந்து போனது. எனவே இப்போது அதிமுக திணறுகிறது.

ஓர் இயக்கம் தோன்றுவதற்கான காரணம் காணாமல் போகும் போது, அந்த இயக்கத்திற்கான தேவையும் தன்னியல்பாகவே காணாமல் போய்விடுகிறது.

அதுமட்டுமன்று. கருணாநிதி தீய சக்தி என்ற எம்ஜிஆரின் கற்பிதப் பரப்புரை, கல்வி அறிவும், அரசியல் விழிப்புணர்வும் குறைவாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் எடுபட்டிருக்கலாம்.

வைதிகத்திற்கு எதிரான தீயாக எரிந்து கொண்டிருந்தவர் கருணாநிதி என்ற வரலாற்று உண்மையை பகுத்தறியும் பக்குவம் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் அடிப்படை உண்மைக்கு முரணான புனையுரைகள் எடுபடமாட்டா.

எது அரசியல் என்ற தெளிவும், திட்பமும் எளிய வீட்டுப் பிள்ளைகளிடமும் வேரூன்றிப் படரத் தொடங்கி விட்டிருக்கும் அறிவு யுகம் இது.

அடிப்படை ஆதாரங்கள் இன்றி, எவரையும், எவராலும் இனித் தவறாக அடையாளப்படுத்த முடியாது.

கருணாநிதி தீய சக்தி அல்ல, தீயாக எரிந்த சக்தி என்பதை அடித்தட்டு மக்களும் அறிந்து, புரிந்து விட்ட காலம் இது.

எனவே, அவரையும் திமுகவையும் வில்லனாக சித்தரித்தே அரசியல் வாழ்வை நடத்தி வந்த அதிமுகவின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இனி திமுகவையோ, அதன் தற்போதைய தலைவர் ஸ்டாலினையோ வெறுமனே புழுதி வாரித்தூற்றி காலத்தை ஓட்டி விட முடியாது.

இந்த மண்ணின், மக்களின் பிரச்சினைகள் குறித்த தீர்க்கமான புரிதலும், தீர்வுக்கான திட்டமிடலும் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் தேவை.

அது திமுகவிடம் மட்டுமின்றி, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனப் பிற சிறிய, பெரிய கட்சிகளிடமும் கூட இருக்கிறது. ஏன், பாஜக, பாமக, நாம் தமிழர் போன்ற எதிர்நிலையில் நிற்கும் வேறு கட்சிகளும் கூட தங்களுக்கென்று சில தெளிவான வேலைத் திட்டங்களை வரையறுத்து வைத்துள்ளனர்.

ஆனால், அதிமுகவிடமோ, கலைஞர் கருணாநிதியையும், திமுகவையும் திட்டித் தீர்ப்பது தவிர உருப்படியான வேலைத்திட்டங்கள் எதுவும் கோட்பாட்டளவில் இல்லவே இல்லை.

அப்படி ஓர் அரசியல் கட்சியின் தேவை தன்னைப் போலவே முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

அதை தினகரனும் ஓரளவு புரிந்து கொண்டதாலோ என்னவோ, அதிமுக விரைவில் காணாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவையே வழிநடத்தியதாக கூறப்படும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரனுக்கும் கூட, இனி கொள்கையற்ற அரசியல் எடுபடாது என்ற தெளிவு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அதன் விளைவாகவே, பாஜகவுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கக் கூடும்.

தனி மனித போற்றுதல், எதிர்ப்பு, காழ்ப்பு போன்றவற்றை மட்டுமே கருவாக கொண்டு உருவாகும் அரசியல் கட்சிகள், காலத்திற்கேற்ப தத்துவார்த்த ரீதியாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனாலேயே அவை காலப்போக்கில் காணாமலும் போகின்றன.

தமிழக அரசியல் வரலாற்றில், சிவாஜி கணேசன், பாக்கியராஜ், எஸ்டி சோமசுந்தரம் தொடங்கி ராஜ கண்ணப்பன் வரை எத்தனையோ கட்சிகளின் ஜனன – மரணங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அதிமுக என்ற ஆகப் பெரிய கட்சியும் கூட அப்படி ஓர் உதாரணமாக வரலாற்றில் இடம் பெறக் கூடும்.

 

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது

வாரணாசியில் மோடி வருகைக்கு 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவா?..

Recent Posts