தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் மீண்டும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வரப்போகிறார் எனவும் கிண்டலடித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. நாங்கள் எம்.ஜி.ஆரால் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள்.
மூன்று எம்.எல்.ஏக்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொறடா அவருக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு புகார் அளித்துள்ளார்.
ஒருவருடமாக அந்த மூன்று உறுப்பினர்களும் டி.டி.வி.க்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில் போதிய ஆதாரங்களை திரட்டி அவசரத்தன்மையை காட்டாமல் நிதானத்தை கடைப்பிடித்து தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகர் அவருடைய முடிவை எடுப்பார்.
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது அர்த்தமில்லாமல் போய்விட்டது. ஒரு முறை கொண்டு வரலாம். நினைக்கும் போதெல்லாம் கொடுப்பது முறையாகாது. தினகரனுக்கு தேள் கொட்டினால், ஸ்டாலினுக்கு நெறிகட்டுகிறது.
ஏற்கனவே ஸ்டாலின் ஒருமுறை சட்டையை கிழித்துக்கொண்டு வந்ததை போல் இன்னொரு முறை சட்டையை கிழித்துக்கொண்டு வர போகிறார்.
பணம் பறிபோய்விட்ட விரக்த்தியில் துரைமுருகன் பேசி வருகிறார். வரும் ஜூன் மாதம் இல்லை, எத்தனை ஜூன் வந்தாலும் அதிமுக ஆட்சி தான் நிலைத்து நிற்கும். இதை நான் சவாலாக கூறுகிறேன். அவ்வாறு அதிமுக அரசு இருந்தால் துரைமுருகன் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது கட்சியில் இருந்து விலகுவாரா??
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.