ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு..

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று இருக்கின்றன.

4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதிக்க போகும் அணி எது? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

2 ஆண்டு தடையை சந்தித்த சென்னை அணி 10–வது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்து சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 5–வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் மும்பை அணி 16 முறையும், சென்னை அணி 11 முறையும் வென்று இருக்கின்றன. இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 3 முறை சந்தித்து இருக்கின்றன.

இதில் 2010–ம் ஆண்டில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

2013–ம் ஆண்டில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், 2015–ம் ஆண்டில் 41 ரன்கள் வித்தியாசத்திலும் மும்பை அணி சென்னையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இன்று 4–வது முறையாக இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன.

சென்னைக்கு எதிரான வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி எல்லா வகையிலும் முயலும். அதேநேரத்தில் கோப்பையை தக்க வைத்து கொள்ள சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தும்.

புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டு : மார்க் ஜூக்கர்பெர்க் பதில்

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

Recent Posts