அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது பற்றியோ எந்தவித தகவல்களும் இல்லை.
எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் ஈரான் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப் ஈரானுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஏதாவது செய்தால் அது மிக மோசமான தவறு ஆகிவிடும்.
ஈரானின் செயல்பாடுகள் குறித்து சில விஷயங்களை கேள்விப்படுகிறேன். அவை அமெரிக்காவை பாதிக்குமானால் ஈரான் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார்.