மோடி அரசுக்கு தயாராகும் சவப்பெட்டிக்கு கடைசியாக அடிக்க வேண்டிய 4 ஆணிதான் இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்த உதயநிதி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக உதயநிதி மேற்கொண்ட பிரச்சாரம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
திமுகவின் பெருந்தலைகள் பலரும் அவரவர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்ததால், தமிழகம் முழுவதும் அவர்களால் செல்ல முடியவில்லை.
இதனை ஈடுகட்டும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, தமிழகம் முழுவதும் உதயநிதிதான் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மக்களிடமே கேள்விகளை எழுப்பி, பதில் சொல்லவைத்த அவரது பிச்சார அணுகுமுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், தற்போது 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் அவர் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்ட உதயநிதி, கணியூர், ராசிபாளையம், இருகூர் (காமாட்சிபுரம்), பட்டணம், பீடம்பள்ளி (நடுப்பாளையம்), கள்ளப்பாளையம், பெரியகுயிலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து வாக்குச்சேகரித்தார்.
அப்போது, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என கட்சிபேதமின்றி அனைவரும் அவரை ஆர்வத்துடன் வரவேற்றனர்.
குறிப்பாக, அதிமுக பணிமனை ஒன்றில் இருந்த அக்கட்சியைச் சேர்ந்த பலரும் வந்து, உதயநிதியைப் பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.
பிரச்சாரத்தின் போது, பொதுவான அரசியல் விமர்சனங்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட அந்தப் பகுதியின் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு, அவற்றுக்கான தீர்வுக்கு உறுதியளிப்பதை உதயநிதி தனது பாணியாக கடைப்பிடித்து வருகிறார். அவரது இந்த பிரச்சார அணுகுமுறைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.
சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த அவர், “மோடி அரசுக்கான சவப்பெட்டி தயாராகி விட்டது. ஒரு சவப்பெட்டிக்கு நான்கு மூலையிலும் ஆணி அடிக்க வேண்டும் அல்லவா… அந்த நான்கு ஆணிகள் தான் இந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்.. எனவே இந்த நான்கு ஆணிகளையும் நறுக்கென்று அடிக்கும் வகையில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அதன் வேட்பாளரை அபரிதமான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதுபோல மனதில் தைக்கும் விதமாகவும், சுருக்கமாகவும் அவர் கூறும் கருத்துகள் மக்களை வெகுவாக வசீகரிக்கின்றன.
மிக எளிமையான அவரது உரையாடல் ரகப்பேச்சும், பக்கத்து வீட்டு பையனைப் போன்ற, சிரித்த முகத்துடன் கூடிய மிக இயல்பான அந்நியோன்னிய தோற்றமும் உதயநிதி மீதான ஈர்ப்பை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்வதை செல்லும் இடங்களில் காணமுடிகிறது.