தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார் நாத் கோவிலுக்கு போக அனுமதி வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்ததை அடுத்து நேற்று (18.05.2019), உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி சுமார் 17 மணி நேரம் அங்கு பல்வேறு வழிபாடுகளை நடத்தினார். அப்போது, காவி உடை தரித்து சுமார் 30 நிமிடங்கள் தியானத்திலும் அவர் அமர்ந்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயல் என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், வழிபாடு முடிவடைந்த பின் கேதார்நாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, கேதார்நாத் ஆலயத்திற்கு செல்ல தமக்கு அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
வழிபாட்டின் போது கடவுளிடம் வேண்டுதலை முன்வைக்கும் பழக்கம் தமக்கு இல்லை என்றும், எல்லாவற்றையும் கொடுக்கும் வல்லமையை கடவுள் மனிதர்களுக்கு வழங்கி இருக்கும் போது, அவரிடம் போய் எதையேனும் கேட்பது தேவையற்றது எனவும் பிரதமர் மோடி அப்போது கூறினார்.