மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு…

டெல்லியில் மெட்ரோ ரயில்களிலும், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,

டெல்லியில் பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் பெண்களுக்கு கட்டண சலுகை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், டெல்லி போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும், கிளஸ்டர் பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் கட்டணமின்றி, இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பான பயணத்தையும், கட்டணம் பற்றிய கவலையின்றி அனைத்து வகையான பொதுப்போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.

இலவச பயணம் என்பது யார் மீதும் கட்டாயமாக திணிக்கப்படாது என்றும், வசதி வாய்ப்புள்ள பெண்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தியே பயணிக்கலாம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், வசதி வாய்ப்புள்ளவர்கள் டிக்கெட் எடுத்து பயணிப்பதை அரசு ஊக்குவிக்கும் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.

பெண்களுக்கான இலவச பயண சலுகை திட்டத்தை எப்படி செயல்படுத்து என்பதற்கான விரிவான திட்டத்தை ஒரு வாரத்தில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், 2 முதல் 3 மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடமும் ஆலோசனைகள் பெறப்படும் என கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்திற்கான செலவை அரசே ஏற்கும் என்றும், இந்த ஆண்டு மட்டும் 700 கோடி ரூபாய் செலவாகும் என கெஜ்ரிவால் கூறினார்.

மெட்ரோ ரயிலில் டெல்லி அரசு 50 சதவீத பங்குதாரராக உள்ள நிலையில், மெட்ரோ ரயில்வே அதிகாரிகளுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இருப்பினும் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மக்களவை தேர்தலில் டெல்லியில் படுதோல்வி அடைந்ததாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலை மனதில் கொண்டும் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்..

இந்தி கட்டாயப் பாடம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது, “கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது” : மு.க.ஸ்டாலின்

Recent Posts