விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அடுத்த ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ககன்யான் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்படும் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் 300 முதல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
இதில் அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் 7 நாட்கள் வரை அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தற்போது இந்த விஷயத்தில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்திய விமானப் படையின் கீழ் இயங்கும் விண்வெளி மருத்துவக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக சிவன் கூறினார்.
இது தொடர்பாக ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மைய உயரதிகாரி நடாலியா லோக்டெவாவுக்கும் ((Natalia Lokteva)) இஸ்ரோ அதிகாரி உன்னிகிருஷ்ணனுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக அவர் தெரிவித்துள்ளார்.