திமுகவின் இளைஞரணி மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி உள்ள நிலையில்
விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞரின் பேரன்… மு.க.ஸ்டாலின் – துர்கா தம்பதியரின் மகன் என்ற மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தாலும் தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராய் நுழைந்து,
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகனாக அறிமுகமானதால் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் உதயநிதி ஸ்டாலின்…!
திரை உலகில் அடுத்தடுத்து சொந்தமாக படங்களை தயாரித்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை,
நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அவர் திமுக நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டது.
பின்னணியில் இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பதாக திமுகவினர் கொண்டாடினர்.
கலைஞரின் மறைவுக்கு பின்னர் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி தொண்டனோடு தொண்டனாக போராட்டத்தில் பங்கேற்பதை வழக்கமாக்கினார்.
அடுத்தடுத்து திமுகவின் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டார்
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த மாதிரி கிராம சபை கூட்டத்தில் தாய்மார்கள் பெருமளவில் ஆர்வத்துடன் பங்கேற்று கலந்துரையாடியதால் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக களம் இறங்கி திமுக வேட்பாளர்களை ஆதரித்து சுட்டெரித்த வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு இளைஞர் மற்றும் தாய்மார்களை வெகுவாக கவர்ந்தார்.
எதிர்தரப்பினரை தனக்கே உரிய ஸ்டைலில் நக்கல் நையாண்டியுடன் வறுத்தெடுத்தார், உதயநிதி ஸ்டாலின்…
நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தமிழகத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக இருந்ததாக திமுக தொண்டர்கள் நம்பினர்.
இதனால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
எப்போதும் போல தனக்கு திமுக தொண்டன் என்ற பொறுப்பே போதும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி வந்தாலும் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து உதயநிதிக்கு திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஏகோபித்த ஆதரவுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஓரிரு நாளில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும்,
அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் முகஸ்டாலின், முன்பு திமுகவின் இளைஞரணி செயலாளராக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.