மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல்,
மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
உப்பள தொழிலாளர்கள் தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தனர்
இதையடுத்து இன்று தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யா நகர் பகுதிகளில் உள்ள உப்பளத்திற்கு நேரடியாக சென்று கனிமொழி எம்பி அங்குள்ள தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்குவது போல் தங்களுக்கும் மழைக் காலங்களில் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதைதொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசும்போது, உப்பளத் தொழிலாளர்கள் மழை காலங்களில் தங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் உப்பள தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்