தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது .
திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள்,
2 கோட்டங்கள் அடங்கிய புதிய மாவட்டம் அறிவிப்பு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சா்கள் உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கிவைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, தலைமைச் செயலா் க.சண்முகம் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் நன்றி கூறினார்.
விழாவையொட்டி தென்மண்டலத்துக்குள்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தென்காசி மாவட்டத்தில், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டப்பேரவைகள் தொகுதிகளை கொண்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ஆயிரம்பேரி பகுதியில் 37 ஏக்கர் பரப்பில் அமைய உள்ளது.