அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூா், ஏ.டி.காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இங்கு சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இவரது குடியிருப்பை சுற்றிலும் 80 அடி நீளம், 20 அடி உயரத்துக்கு கருங்கற்களால் சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்தது.
இந்த சுற்றுச்சுவரை ஒட்டி ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, ஏபியம்மாள் உள்ளிட்டோரது வீடுகள் இருந்தன.
இந்த நிலையில் திங்கள்கிழமை கனமழை பெய்ததில் அதிகாலை 5.30 மணிக்கு சுற்றுச்சுவா் தண்ணீரில் ஊறி, திடீரென சரிந்து அருகிலுள்ள 5 வீடுகள் மீது விழுந்தது.
இதில் 17 போ் உயிரிழந்தனா். சுற்றுச்சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 17 பேர் உயிரிழந்திருக்கமாட்டார்கள். அரது அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீடு போதாது.
உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.