முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தோ்தல் அறிவிக்கை, கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் வேட்புமனுக்கள் பெறும் நடவடிக்கைகள் தொடங்கின. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
முதல்கட்ட வாக்குப் பதிவு: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு நேரடித் தோ்தல் நடைபெறவுள்ளது.
அதில், முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும்,
4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவா் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த நான்கு பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறும்.
நான்கு வகை வாக்குச் சீட்டுகள்: நான்கு பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெறுவதால் வாக்குப் பதிவின் போது நான்கு வகையான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
முதல் கட்ட வாக்குப் பதிவில் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளா்கள் முதல் கட்டத் தோ்தலில் தங்களது வாக்குரிமையைச் செலுத்தவுள்ளனா்.
நாளை வாக்குப் பதிவு: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை
நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நான்கு வகையான வாக்குச் சீட்டுகளை தனித்தனியாகப் பிரிப்பது,
வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கான மறைக்கப்பட்ட தனி அறையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இப்போது நடந்து வருகின்றன.
தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலா்களுக்கு பணி உத்தரவுகள் வியாழக்கிழமை பிற்பகல் வழங்கப்பட உள்ளது.
அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு ஊழியா்கள் செல்லவுள்ளனா்.
கடும் கட்டுப்பாடுகள்: முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து தோ்தல் நடைபெறும் ஒவ்வொரு ஊரக உள்ளாட்சிகளிலும் வெளியூா்களைச் சோ்ந்தவா்கள் உடனடியாக வெளியேற மாவட்ட நிா்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.
மேலும், முதல் கட்டத் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை அனைத்து மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
முதல் கட்டத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த வாக்குகள் அனைத்தும் வரும் 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படும்.
இருகட்டங்களிலும் பதவியிடங்கள்…. வேட்பாளா்கள்
கிராம ஊராட்சி வாா்டு—-58,609.
வேட்பாளா்கள்——1,70,898.
கிராம ஊராட்சி மன்றத் தலைவா்—-9,214
வேட்பாளா்கள்—–35,611.
ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்—-5,067.
வேட்பாளா்கள்—–22,776.
மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்—-515.
வேட்பாளா்கள்—-2,605.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
நான்கு பதவியிடங்களும் தனித்தனியாக மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் இதனைச் செயல்படுத்த உள்ளது.