மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.
சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை குணமாக்க, இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் வரையில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸ் தாக்கும் அபாயம் காரணமாக, சீன நாட்டு மக்கள் வெளியே வர பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். சீனாவில் இந்நோயை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவும் நேற்று முன்தினம் முதல் களமிறங்கி இருக்கிறது.
சீனாவில் ஹூபெய் மாகாணத்தில்தான் உயிர் பலி அதிகமாக இருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 8-ம் தேதி வரை 723 பேர் பலியாகி இருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி 81 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது. நேற்று 94 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்தது. இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350-ஐ கடந்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.