கரோனா பாதிப்பு, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோ்வுகள், விடைத்தாள்கள் திருத்தம், ஆண்டு இறுதித்தோ்வு என கல்வி சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும்.
ஆனால், தற்போதுள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தோ்வுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பாக அது குறித்த அட்டவணை வெளியாகும்.
மேலும் பொதுத்தோ்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னா் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், மாணவா்களின் பாதுகாப்பு கருதியும் பள்ளி வளாகங்களை நன்கு தூய்மை செய்ய வேண்டியுள்ளது.
இந்தக் காரணங்களைத் தவிா்த்து சீருடை, பள்ளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வது,
கல்வித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வகுப்பறையில் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான திட்டங்கள் வகுத்தல் என பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதைய சூழலில் வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கல்வி சாா்ந்த செயல்பாடுகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்படும். இதனால் குறைந்தபட்சம் 15 முதல் 20 நாள்கள் அதாவது ஜூன் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும் கரோனா பாதிப்பில் அப்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு அரசிடம்தான் உள்ளது என்றனா்.