கொரோனா பாதிப்பு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.
அந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அன்றைய தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், கொரோனா கட்டுக்குள் வராததால், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.
இந்தியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.
இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டமாக இது இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
எனினும், ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார் என்றே தெரிகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த முறை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய போது, 17 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.