தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,336 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1218 பேர் உயிரிழந்த நிலையில், 9951 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1312 பேர் குணமடைந்துள்ளனர்.
இருப்பினும், அரசின் போர்கால நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
முதலில், ஈரோடு, தூத்துக்குடி, நீலகரி உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த பட்டியலில் சேர்ந்தனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டமும் பட்டியலில் சேர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் மொத்த 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 11 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் எஞ்சிய பெண் ஒருவரும் இன்று குணமடைந்துள்ளார். அவர் இன்றைக்குள் வீடு திரும்புகிறார்.
இதன் மூலம், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில்,
சிவகங்கை மாவட்டம் கொரோனாவை வென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பச்சை மண்டலம் அந்தஸ்தை கிருஷ்ணகிரி மாவட்டம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.