இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும், மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்யும் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.
சர்வதேச கடன்தர நிர்ணய ஆய்வு நிறுவனமான மூடிஸ் கடந்த 20 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவின் தரமதிப்பை நேற்றுக் குறைத்தது. கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் தரமதிப்பு என்பது பிஏஏஏ2 என்ற நிலையிலிருந்து பிஏஏ3 என்ற அளவுக்கு சரிந்தது இந்த சூழலில் பிரதமர் மோடி நம்பிக்கை தரும் வகையி்ல் பேசியுள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 125 ஆண்டுவிழா இன்று டெல்லியில் நடந்தது.இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி அதில் பேசியதாவது:
கரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்தபின் நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். ஏற்கெனவே லாக்டவுன் நீக்கத்தில் முதல்கட்டத்தில் இருக்கிறோம், மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம்.
நான் இவ்வாறு நம்பிக்கையுடன் பேசுவது பலருக்கு வியப்பைத் தரலாம். நான் இந்திய மக்களின் அறிவுத்திறன், திறமை, புதியகண்டுபிடிப்புகள், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில்முனைவோர், பணி்த்திறன் ஆகியவற்றின் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளேன்.
ஒருபுறம் நாம் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை உறுதி செய்துவருகிறோம், மற்றொருபுறம் பொருளாதாரத்தையும் திறந்துவிட்டு இயல்புக்கு வர அனுமதித்துள்ளோம்.
இன்று நாம் லாக்டவுனை தளர்த்தும் முதல்கட்டத்தில் இருக்கிறோம். ஆதலால், பொருளாதார வளர்்ச்சியை இயல்புப்பாதைக்கு கொண்டுவரும் முயற்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
நம்முடைய நோக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முதலீட்டு கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவை இந்தியா தற்சார்பு பொருளாதாரமாக உருவாக அவசியம்.
என்னை நம்புங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்்ச்சி இயல்புக்கு திரும்புதல் கடினமாக இருக்காது. இந்தநேரத்தில்தான் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உத்வேத்துடன் செயல்பட வேண்டும். தொழில்துறை தலைவர்கள்தான் உள்நாட்டுக்குஉத்வேகம் கொடுப்பவர்கள்
இந்தியாவில் பொருட்களை நாம் தயாரி்ப்பதும், உலகிற்கிற்காக தயாரித்து வழங்குவதும் அவசியம். காலச்சூழலுக்கு ஏற்றார்போல் பொருளாதார சீர்திருத்தங்களை மத்தியஅரசு செய்து வருகிறது, இந்த சீர்திருத்தங்கள் தொடர்ந்து இருக்கும். முதலீட்டுக்கும், தொழில்செய்வதற்கும் ஏதாவான சூழல் உருவாக்கும் வரை நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வோம். நாட்டின் பொருளாதார எந்திரம் செயல்படுவதற்கு குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் அவசியம்.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குதிரும்பும் எனும் நம்பிக்கையை விவசாயிகள்,சிறு வணிகர்கள், தொழில்முனைவோர் ஆகியோரிடம் இருந்து பெறுகிறேன். நம்முடைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை கரோனா குறைத்திருக்கிறது. ஆனால், இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்