மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன .
ஏற்கனவே, இதுதொடர்பாக பாமக, மதிமுக, தி.க உள்ளிட்டவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன .
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி முறையிட்டனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
வழக்கு விசாரணை தொடங்கியது முதலே, மத்திய அரசின் பதில் வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். வரும் 22-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மருத்துவ படிப்பில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும் உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் விசாரணை ஜூன் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.