தமிழகத்தில் செய்யப்படும் பரிசோதனை விபரங்களை வெளியிடுக தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை…

“10 லட்சம் பேருக்கு 6400 பேர் என்றளவில் மட்டுமே கொரோனா பரிசோதனை;

10 பேரில் ஒருவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ்;

பரிசோதனைகளை அதிகரிக்கவும் – விவரங்களை வெளியிடவும் அதிமுக அரசு முன்வராமல் இருப்பது ஏன்?”

– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள், தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும், சீரான அளவில் பரவலான முறையில், ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போனதால், நமது மாநிலம் இப்போது கடுமையான சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கேட்டதற்குப் பிறகு, ஒரேயொரு முறை அந்தப் பட்டியலை வெளியிட்டார்கள்.

அதற்குப் பிறகு, அவர்களுக்கு மட்டும் தெரிந்த காரணங்களுக்காக அதை நிறுத்தி விட்டார்கள். நாள்தோறும் அந்தப் பட்டியலை வெளியிடுவதில் என்ன சங்கடம் என்று தெரியவில்லை.

தமிழக அரசோ, நாட்டிலேயே அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறது. எனினும், மாநிலத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, 10 லட்சம் பேருக்கு 6 ஆயிரத்து 400 பேர் அளவிற்குத்தான் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனடிப்படையில் பார்த்தால், இந்திய அளவிலான பரிசோதனைகளின் எண்ணிக்கையில், தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஜூன் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா ‘பாசிட்டிவ்’ எண்ணிக்கையில் 80 விழுக்காடு அளவானது, எந்தெந்த மாவட்டங்களில் 80 விழுக்காடு அளவிற்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதோ அந்த மாவட்டங்களைச் சேர்ந்ததாக உள்ளது. எனவே பரிசோதனைகளின் எண்ணிக்கையைப் பரவலாக்கி அதிகப்படுத்துவதன் மூலமே, நோய்த் தொற்றின் உண்மையான அளவைக் கண்டுபிடிக்க முடியும்.

ஜூன் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கொரோனா ‘பாசிட்டிவ்’ விகிதம் என்பது, 10 விழுக்காட்டைக் கடந்துள்ளது. அதாவது, மாநிலத்தில் பரிசோதிக்கப்பட்டவர்களில், 10 பேரில் ஒருவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ்வாக உள்ளது. நோய்த் தொற்று இப்படி வேகமாக உயர்ந்துள்ள நிலையில், பரிசோதனைகளை அனைத்து மாவட்டங்களிலும் அதிகப்படுத்துவதுதான், உள்ளபடியே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முதன்மையான முழுச் செயல்பாடாகும்.

ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு பரிந்துரைத்த அளவுகோலைக்கூடப் பின்பற்றாமல், அதைவிடக் குறைவான அளவிலேயே நாள்தோறும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளிலிருந்து அரசாங்கத்தால் கோரப்பட்ட பரிசோதனைக் கருவிகள் உரிய அளவில் வந்து சேராததுதான், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல், முடங்கி இருப்பதற்குக் காரணம் என இன்றுவரை அறியப்படும் நிலையில், உள்நாட்டில் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்போர் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தங்களால் மாதந்தோறும் 14 கோடியே 60 லட்சம் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்பதற்கான திறன் உள்ள நிலையில், ஐ.சி.எம்.ஆர் அமைப்பால் சரிபார்க்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் பலவும் எவ்விதப் பயன்பாடுமின்றி, வெறுமனே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்தே மாதந்தோறும் கோடிக்கணக்கான பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்போது, அரசாங்கம் ஏன் இதுவரையில் வெறும் 7 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை ‘மாதிரி’களை (Samples) மட்டும் மேற்கொண்டுள்ளது?

சென்னையைத் தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு சில ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் மட்டும்தானே அரசுத் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன? அதனால்தானே அந்த மாவட்டங்களில், நாளொன்றுக்கு சில நூறு பேர் மட்டுமே பரிசோதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும்கூட, விமானத்தில் வருவோர், ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையப் பயணிகள் போன்றோர் மட்டும்தானே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்? ஒவ்வொரு மாவட்டத்திலும் நாள்தோறும் தேவையான அளவுக்குப் பரிசோதனைகள் செய்யக்கூடிய வகையில், தமிழக அரசு இன்னமும் கூடுதலாக சில லட்சம் பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பாமல் இருப்பது ஏன்? மாநிலம் முழுவதும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருப்பது ஏன்?

இன்று தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள- குறிப்பாகச் சென்னை எதிர்கொள்கின்ற மோசமான நிலையைத் தவிர்த்திருக்கவும் தடுத்திருக்கவும் வேண்டுமென்றால், முதல்கட்ட ஊரடங்கின் போதே பெருமளவிலான பரிசோதனைகளைச் செய்திருக்கவேண்டும். அதை இப்போதும் கூடச் செய்ய முன்வராமல், மீண்டும், ஊரடங்கிற்குள் மேலும் ஓர் ஊரடங்காக, ஒரு முழு ஊரடங்கைச் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துகிறது அரசு. இது, நோய்த் தொற்றையும் குறைக்காது; மக்களின் பொருளாதார நிலையையும் மேலும் மோசமாக்கவே செய்யும். இதனால் இரட்டை இழப்பு நமது சமூகத்திற்கு ஏற்படும் என்பதை அ.தி.மு.க. அரசு ஏனோ உணர்ந்திட மறுக்கிறது.

நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முன்னுரிமை தராமல் அலட்சியம் செய்வதால், இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகப் போகின்றனவோ என உள்ளம் பதறுகிறது; இன்னும் எத்தனை பேர் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேர்ந்திடப் போகிறதோ என நெஞ்சம் நிலைகுலைகிறது.

பெயரளவிற்குச் செயல்படும் நிலைமையிலிருந்து மாறி, உண்மை நிலவரத்தின் அடிப்படையிலும், உரிய புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும், ஆக்கபூர்வமான செயல்பாடுகளை எடுக்கும் அளவுக்கு இந்த அரசாங்கம் எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது?

தமிழகத்தில் மொத்தம் எத்தனை சோதனை மையங்கள் உள்ளன; ஒவ்வொன்றும் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு எத்தனை சோதனைகளைக் கையாள முடியும்; இதுவரை சோதனை மையம் வாரியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் எத்தனை;

தொற்றுத் தொடர்புகள் (Contact Tracing) இதுவரை மாவட்ட வாரியாக எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; என்ற விவரங்களைப் பொதுக் களத்தில் உடனடியாக முன்வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான், அரசு எவ்வளவு தூரம் முன்யோசனையுடன் திட்டமிட்டுச் செயலாற்றியிருக்கிறத…

 

தமிழகத்தில் ஒரே நாளில் 2,174 பேருக்கு கரோனா தொற்று..

தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் அரசாணை வாபஸ்..

Recent Posts