2,264 முறை சீன ஊடுருவல் எப்படி நடந்தது என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க துணிச்சல் இருக்கா?: ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி..

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2 ஆயிரத்து 264 முறை சீன ஊடுருவல்கள் இந்திய எல்லையில் நடந்துள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு துணிச்சல் இல்லையே என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்

கிழக்கு லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நேற்று கருத்துத் தெரிவித்தார்.

அதில் “பிரதமர் மோடி அறிவிப்புகளை வெளியிடும்போது வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அதன் விளைவுகளையும், தேசப் பாதுகாப்பு, எல்லைப்புற நலன் ஆகியவற்றை மனதில் வைத்துப் பேச வேண்டும். ராஜதந்திரம், தீர்க்கமான தலைமை என்பது தவறான தகவல் தருவதில் இல்லை என்பதை நாங்கள் அரசுக்கு நினைவூட்டுகிறோம்” என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

இதற்கு பதிலடி கொடுத்து பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதில் “மன்மோகன் சிங் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, சீனாவிடம் இந்தியாவின் 43 ஆயிரம் கி.மீ. எல்லைப் பகுதியைத் தாரை வார்த்துக் கொடுத்தது..
சீன நடவடிக்கைகளைப் பற்றி மன்மோகன் சிங் கவலைப்பட வேண்டுமானால் ஒரு விஷயதுக்காக மட்டுமே கவலைப்பட வேண்டும் என விரும்புகிறேன். அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துச் சரணடைந்தார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை சீனா 600 முறை ஊடுருவல்களில் ஈடுபட்டது. இதற்காகத்தான் கவலைப்பட வேண்டும்” எனத் தாக்கிப் பேசியிருந்தார்

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் பதிவிட்ட கருத்தில் “ 2010 முதல் 2013-ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியி்ல் இந்திய எல்லைக்குள் 600 முறை சீன ராணுவம் ஊடுருவியதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா விளக்கம் கேட்டிருந்தார்.

ஆம், அங்கே ஊடுருவல்கள் நடந்தது உண்மைதான். ஆனால், இந்திய எல்லையில் எந்தப் பகுதியையும் சீன ஆக்கிரமிக்கவில்லையே, சீன ராணுவத்துடன் ஆவேசமான மோதல் நடைபெறவில்லையே, 20 ராணுவ வீரர்கள் உயிரிழக்கவில்லையே.
நான் கேட்கிறேன், கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடியின் ஆட்சியி்ல் இந்திய எல்லைக்குள் 2ஆயிரத்து 264 முறை சீன ராணுவத்தினர் ஊடுருவியுள்ளார்கள். அது குறித்து பிரதமர் மோடியிடம் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா விளக்கமோ, கேள்வியோ கேட்கும் துணிச்சல் இருக்காது என நான் பந்தயம் வைக்கிறேன்.

சீன, இந்திய ராணுவ கமாண்டர்கள் அளவில் நடக்கும் பேச்சு என்பது இப்போது இருக்கும் நிலையை அப்படியே வைத்துக்கொள்ளத்தான். சீன ராணுவம் பிங்கர் 4-ம் இடத்திலிருந்து பிங்கர் 8-ம் இடத்துக்கு இடையே பல ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி, கட்டிடங்களை கட்டிவிட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் இந்தியாவின் லடாக் பகுதியில் இருப்பவை. இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பையும், ஊடுருவல்களையும் இவை சுட்டிக்காட்டுகிறதா?
இவ்வாறு ப.சிதம்பரம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் ஊழல்’ : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: ஜூலை 10 -ந் தேதி வாக்குப்பதிவு..

Recent Posts