சாத்தான்குளம் லாக்கப் மரணம் நடந்து நான்கு நாட்களைக் கடந்தபிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருவரும் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர்.
அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ராகுல்காந்தி, பிரியங்கா சோப்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்தவிவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் எஸ்.ஐ இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் கட்டாய காத்திருப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். மீதமுள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் கைது நடவடிக்கையை வலியுறுத்திவரும் நிலையில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
இதுதொடர்பான தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கும்போதும், சாத்தான்குளத்தில் லாக்கப் மரணம் நடைபெற்று நான்கு நாள்களைக் கடந்தபிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த அரசும் முதல்வரும் இன்னமும் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள்? எதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.