கரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், அச்சமில்லாத சூழலையும் உருவாக்கி, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம், சூரத்தில் கடந்த மாதம் கனரா வங்கியின் பெண் ஊழியர் ஒருவரை போலீஸார் தாக்கியது, மகாராஷ்டிராவில் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன.
இதைத் தொடர்ந்து அனைத்து வங்கி ஊழியர்கள் அமைப்பு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழல் தேவை எனக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார். இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடந்த 7-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
”கரோனா வைரஸ் பரவும் காலத்தில் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடப்பதைத் தடுத்து, அதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் உள்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வங்கி ஊழியர்கள் மக்களுக்காகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் சிறிதும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் நிலவ வேண்டும்.
சமூகவிரோத சக்திகள் வங்கிக்குள் நுழைந்து, வங்கி ஊழியர்களை மிரட்டுவது அவதூறாகப் பேசுவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் நடப்பது உண்மையென்றால், தீவிரமாகச் செயல்பட்டு, இரும்புக் கரம் கொண்டு, சட்டத்தின் ஆட்சியை தீவிரமாகச் செயல்படுத்தி, அந்தச் செயல்களைத் தடுக்க வேண்டும்.
வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் போதுமன பாதுகாப்பையும், அச்சமில்லாத சூழலையும் உறுதி செய்வது அவசியம். மக்களுக்குத் தடையின்றி வங்கிச் சேவை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் முக்கியத்துவம் அளித்து மாவட்ட ஆட்சியர்கள், போலீஸாருக்கு அறிவுறுத்தி, வங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
வங்கி ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர், வங்கி ஊழியர்களிடம் தகாத முறையில் பேசுவோர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி ஊக்கமாகப் பணிபுரிய உதவும்”.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.