மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – ப.சிதம்பரம் கண்டனம்…

மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர்.

தற்போது தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெஹபூபா முப்தியின் காவல் வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டுக் காவலை மேலும் மாதங்களுக்கு நீட்டித்து மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

“61 வயதான முன்னாள் முதல்வர், 24 மணிநேரமும் பாதுகாப்புக் காவலரின் கீழ் பாதுகாக்கப்பட்ட நபராக இருக்கும் போது, எந்த அடிப்படையில் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பார்? வீட்டுக் காவலில் மெஹபூபாவை வீட்டுக் காவலில் வைத்தமைக்கு அவரது கட்சியின் கொடியின் நிறத்தைக் காரணமாகக் கூறுவது நகைப்புரியதாக உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மெஹபூபா முப்தி ஏன் பேசக்கூடாது? அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சு சுதந்திரத்தில் ஒரு பகுதியாக இல்லையா?

அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர்களில் நானும் ஒருவன். 370-வது பிரிவுக்கு எதிராக நான் பேசினால், நான் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பேனா?

நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து குரல் கொடுத்து, மெஹபூபா முப்தியை உடனடியாக விடுக்க வலியுறுத்துவோம்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை…

தீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

Recent Posts