புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி நாளில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிட்டு விநாயகரை வழிபடுவார்கள். பத்தாம் திருநாளன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.
சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு திகழ்கிறார் விநாயகர். அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது. வயிறு, ஆசனத்தில் படியாமல் “அர்த்தபத்ம” ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார். இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்திலும் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்கிறார். ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குறுகியும் காணப்படுவது விநாயகருக்கு சிறப்பம்சம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த 13ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 6வது நாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.
இதையொட்டி கற்பகவிநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் சூரனை வதம் செய்தார்.
ஆண்டுதோறும் பிள்ளையார்பட்டியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த ஆண்டு அனைத்து விழாக்களும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெறுகிறது.
10வது திருநாளன்று கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. கற்பக விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டு வழிபாடு நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் என்ற செந்தில் செட்டியார், காரைக்குடி மெய்யப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.