“பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் எச்.வசந்தகுமார்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான எச்.வசந்தகுமார் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரைத் தொலைபேசியில் அழைத்து உடல் நலம் விசாரித்தேன். ‘விரைவில் வீடு திரும்புவார்’ என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில் கொரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து அநியாயமாகப் பிரித்துச் சென்று விட்டது அதிர்ச்சியளிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘இலக்கியச் செல்வர்’ குமரி அனந்தன் அவர்களின் சகோதரரான வசந்தகுமார் அவர்கள் எப்போதும் இன்முகத்துடன் காட்சியளிப்பவர்; பழகுவதற்கு இனிமையானவர்.

‘முயற்சி உடையான்; இகழ்ச்சி அடையான்’ என்பதற்கேற்ப, கடின உழைப்பு, சலியாத முயற்சி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்வில் சாதித்துக் காட்டியவர். தொகுதி மக்கள் தன்னை எளிதில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பினைத் தவறாமல் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்; சென்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று – மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றியவர்.

அவரது வெற்றிக்காக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நான் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட நேரத்தில், அவருக்கும் – காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பை நேரில் கண்டு நான் வியந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல; அனைத்துக் கட்சித் தொண்டர்களின் அன்பையும் அளவின்றிப் பெற்றவராகவே அவர் திகழ்ந்தார் என்பதை நானறிவேன்.

‘வெற்றிக் கொடிகட்டு’ ‘வெற்றிப் படிக்கட்டு’ ஆகிய புத்தகங்களை எழுதிய அவர், இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு – ‘வசந்த் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தைத் தனது கடின உழைப்பால் உருவாக்கிக் காட்டி முன்னுதாரணமாக விளங்கியவர்.

காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்திற்கு உதவிடும் வகையில், ‘வசந்த் டிவி’-யை தோற்றுவித்து நடத்திய அவர், சோனியா காந்தி அம்மையார் மற்றும் இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.

அரசியல் வேறு – மக்கள் பணி வேறு – வர்த்தகம் வேறு என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்விற்கு ஒரு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வசந்தகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ‘இலக்கியச் செல்வர்’ குமரி அனந்தன் அவர்களுக்கும், மாண்புமிகு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் – தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் – அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எச்.வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தொழில்முனைவோரின் நம்பிக்கை. வாடிக்கையாளரின் அன்புக்குரிய அண்ணாச்சி. அரசியல்-தொழில் எனும் இரட்டைக்குதிரையில் சாமர்த்தியமாகப் பயணித்து சாதித்தவர். வசந்தகுமார் எம்.பி. அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்-காங்கிரஸ் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.” எனத் தெரிவித்துள்ளார்.

காங்., எம்.பி வசந்தகுமார் மறைவு : ப.சிதம்பரம் இரங்கல்…

முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..

Recent Posts