கரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நெருக்கடிக்கு மத்தியில் செப்.14 முதல் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
கரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உறுப்பினர்கள் போதுமான இடைவெளியுடன் பங்கேற்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கூட்டம் தொடங்கப்படும் செப்.14 அன்று மக்களவை காலை 9 மணி முதல் மத்தியம் 1 மணி வரையிலும், அடுத்தடுத்த நாட்களில் மத்தியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அக்டோபர் 1 வரை செயல்படும். மாநிலங்களவையை பொறுத்த அளவில், முதல் நாளில் மத்தியம் 3 மணி தொடங்கி இரவு 7 மணி வரையிலும், பின்வரும் நாட்களில் காலை 9 மணி முதல் மத்தியம் 1 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரமும், தனி நபர் மீதான தீர்மானமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மேற்கொள்காட்டி, திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் கரோனா தொற்று நெருக்கடியை பயன்படுத்தி ஜனநாயகம் கொலை செய்யப்படுவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.