கரோனா வைரஸை எதிர்த்து முன்களத்தில் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை என்று கூறுவது கரோனா போர் வீரர்களை நோகடிப்பதாகும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி சவுரே மாநிலங்களவையில் இந்த வாரம் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வி்ட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவுக்குத் தலைப்பாக, “பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைப் பராமரிக்காத மோடி அரசு” என்று தலைப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “பாத்திரங்கள், சாப்பாட்டுத் தட்டுகளில் ஒலி எழுப்புவது, தீபம் ஏற்றுவதைவிட, மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை என்பது மிக முக்கியம். கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் கரோனா போர் வீரர்களை ஏன் மோடி அரசு நோகடித்து அவமானப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும், பாத்திரங்கள், சாப்பாட்டுத் தட்டுகளில் ஒலி எழுப்ப வேண்டும், கை தட்டி மரியாதை செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார். அதைக் குறி்பிட்டு ராகுல் காந்தி சாடியுள்ளார்.