இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று (அக். 12) தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது கவலையளிக்கிறது.
அந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்று எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த நிலையில், மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.