விளைந்தும் விலையில்லை : நெல் கொள்முதலை அதிகப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். “காவிரிக் காப்பாளர்” எனப் பட்டம் சூட்டிக்கொண்ட முதல்வர் பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் எட்டப்பட்டுள்ள அதிக விளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு நெல் மூட்டைகள் குவிந்து வருகின்றன.

அதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுவதற்காக காத்துக் கிடக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல், மழையில் நனைந்து வீணானதாகத் தகவல் வெளியானது.

1000 மூட்டைகள் கொள்முதல் செய்யும் இடத்தில் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மழை பெய்ததால் நீரில் தேங்கி சேதமடைந்துள்ளன.

தொடர் மழையின் காரணமாக அந்த நெல் ஊறி ஈரப்பதம் அதிகரிப்பதுடன் முளைத்தும் விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை குறித்து முகநூலில் பதிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சியாளர்களைக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது முகநூல் பதிவு:

“விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாகின்றன. உரிய முறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். “காவிரிக் காப்பாளர்” என்ற பட்டம் மட்டும் சூட்டிக்கொண்ட பழனிசாமி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். பயிர்தான் விவசாயிகளின் உயிர்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகளுக்கு டிவிட்டில் வக்கிர மிரட்டல் கனிமொழி எம்.பி கண்டனம்..

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது ?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

Recent Posts