ஆந்திரம் காட்டும் வழியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்!என மருத்துவர் இராமதாஸ் அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆந்திர மாநில அரசு புதிய புரட்சியைப் படைத்திருக்கிறது.
வன்னியகுல சத்திரியர்கள், அக்னிகுல சத்திரியர்கள், முதலியார்கள், யாதவர்கள், விஸ்வபிராமணர்கள் என 56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு நல வாரியத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கான இந்த நடவடிக்கை மிக மிக வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
சமூகநீதியின் தொட்டில் என்று கூறிக் கொண்டு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளை களையவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் முழுமையான சமூகநீதியை வழங்கவும் மறுத்து சமூக அநீதியை இழைத்து வரும் நிலையில், ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும்.
2019 & ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆந்திரம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு முறையாக சென்றடையவில்லை என்பதை நேரடியாக கண்டறிந்தார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு சமுதாய மக்களுக்குமான நலத்திட்டங்களை அவர்களுக்கு கொண்டு சென்று சேர்க்க, 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நலவாரியம் அமைக்கப் படும் என்று வாக்குறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதியைத் தான் இப்போது அவர் நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலராக ஜெகன் ரெட்டி உருவெடுத்துள்ளார். பாராட்டுகள்.
ஒவ்வொரு வாரியத்திற்கும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 56 வாரியங்களில், பாதிக்கும் கூடுதலாக, அதாவது 29 சமுதாய நல வாரியங்களின் தலைவர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிக் கட்டணம், 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.18,750 நிதி உதவி, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் இனி சம்பந்தப்பட்ட சமுதாய நல வாரியங்கள் மூலமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய நல வாரியங்கள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் யாருக்கும் விடுபடாமல் அனைவருக்கும் கிடைக்கும்; நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிப்பவர்களும் அதிக அலைச்சல் இல்லாமல் எளிதாக உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில் இது அனைவருக்கும் பயனளிக்கும்.
‘‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்….’’ என்ற அவ்வைப் பாட்டியின் வரிகளைப் போல ஒரு நாட்டிலுள்ள சமுதாயங்கள் முன்னேறாமல், அந்த நாடு முன்னேறாது. ஆகவே, நாட்டை முன்னேற்ற சமுதாயங்கள் முன்னேற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஆந்திர அரசு அறிவித்துள்ள சமுதாய நல வாரியங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சரியான நடவடிக்கை ஆகும். தமிழகத்திலும் இத்தகைய சமுதாய நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அனைத்து சமுதாயங்களும் சம அளவில் வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அச்சமுதாயங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த முடியும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஒவ்வொரு சமூகத்துக்குமான நீடித்த வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்; அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சமவாய்ப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்; தமிழ் நாட்டின் அனைத்து வகுப்புகளின் சமூக, பொருளாதார நிலைமையையும் முன்னேற்றத்தையும் துல்லியமாக அளவிடும் நோக்கில் பன்முகத்தன்மை குறியீட்டு எண்ணை (Diversity index) உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட இவ்விலக்குகளை அடைவதற்கான முதல் படி தான் ஆந்திர அரசு அறிவித்துள்ள சமுதாய நல வாரியங்கள் ஆகும்.
தமிழ்நாட்டிலும் அனைத்து சமுதாயங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி உருவாக்கப்பட வேண்டும். அதற்காக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள 263 சமுதாயங்களில், எந்தெந்த சமுதாயங்களின் மக்கள்தொகை 30 ஆயிரத்திற்கும் அதிகமோ, அச்சமுதாயங்களுக்கு தனித்தனி நலவாரியம் அமைக்க வேண்டும்; அவற்றின் தலைவராக அச்சமுதாய மக்களையே நியமிக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு அரசு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.M