நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
அதனையடுத்து, எல்லைகளை வரையறை செய்யச் சிறப்பு அதிகாரியாக லலிதா நியமிக்கப்பட்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
இந்தநிகழ்வில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஸ்ரீநாதா, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏகள் மற்றும் வணிகர், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.