விரைவில் நடைபெற உள்ள jமிழகம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளில் இதற்கான திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சட்டத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய சட்டத்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தது தேர்தல் ஆணையம். அதில், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இத்திட்டத்துக்கு வெளியுறவுத்துறையின் ஒப்புதலும் கோரப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை வெளியுறவு அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என அந்த அமைச்சு அண்மையில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இம்மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 117,000 பேர் தற்போது வெளிநாடுகளில் வசித்தாலும், வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனில் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வெளியுறவு மற்றும் சட்ட அமைச்சுகளை தேர்தல் ஆணையம் தொடர்புகொண்டது.
வெளியுறவு அமைச்சு தேர்தல் ஆணையத்தின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சட்டத்துறையும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகிவிடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.