மத்திய அரசு யாருக்காக இந்த பட்ஜெட்டை போட்டுள்ளது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பேசினார்
அப்போது; 2 ஆண்டுகளாக சரிவில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்க 2 வழிகள் உள்ளன. மலை போல் தேங்கிக்கிடக்கும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும். ஏழைகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். பொருட்களுக்கான தேவைப்பாட்டை அதிகரிப்பதற்கான ஒரே வழி, மக்கள் கையில் பணம் புழங்குவது தான்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.130 லட்சம் கோடியாக சரிந்துவிட்டது. கொரோனா முடக்கத்தால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் 35% மூடப்பட்டுவிட்டது.
அரசு ஏழைகளையும் வேலை இல்லாதவர்களையும் சிறு, குறு, நடுத்தர தொழில்களையும் அலட்சியப்படுத்திவிட்டது. கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தரப்பினரும் வேலையின்றி தவித்தனர். நாட்டில் 1.20 கோடி பேர் வேலையிழந்து உள்ளதாக வேதனை தெரிவித்தார். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து சுமார் 3 கோடி பேர் காத்திருக்கின்றனர். மத்திய அரசு யாருக்காக இந்த பட்ஜெட்டை போட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்கப்போவதாக பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் தூண்டுவிலும் வருவாய் இழப்பை ஈடுகட்டத்தான் அடுத்தாண்டு வாங்கும் ரூ.10 லட்சம் கோடி கடன் உதவும். வரும் நிதியாண்டில் அரசு எதிர்பார்ப்பது போல் வரி வருவாய் இலக்கை எட்ட முடியாது. கொரோனா காலத்துக்கு முந்தைய வளர்ச்சி நிலையை எட்ட 3 ஆண்டுக்கு மேல் ஆகும். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள 14.4% ஜிடிபி வளர்ச்சி என்பது பண வீக்கத்தை கருத்தில் கொண்டதால் உண்மையில் 9% ஆகவே இருக்கும் கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பதற்கு மாறாக 3 நாட்களிலேயே பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது.
வேளாண் செஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராது என்ற பொய் 3 நாளில் அம்பலமாகிவிட்டது. ஏழைகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டால் மத்திய அரசுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். மத்திய பாஜக அரசின் பட்ஜெட் ஏழைக்கானது அல்ல; முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கானது என தெரிவித்தார்.