ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவு தமிழகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. சாதி பாசம் வழுக்கிவிழும் அளவுக்கு இருந்தது. அதைவிட துரோகம் ஒருபடி மேலேபோய் பல்லிளித்தது.
இதற்கு உதராணமாக காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வெல்லப்போவது சாதியா..பணமா… துரோகமா என சற்று அலசிப் பார்ப்போம்.
காரைக்குடி தொகுதியில் பிரதான தேசிய கட்சிகளான பாஜக- காங்கிரஸ் கூட்டணி பலத்தில் மோதுகின்றன.இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகிவுள்ளது. காரணம் பாஜகவின் முன்னாள்தேசிய செயலாளர் எச்..ராஜா போட்டியிடுவதால்.
எச்.ராஜா
எச்.ராஜா கடந்த மக்களவைத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி உள்ளடங்கிய சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். கடந்த 2001 -ஆம் ஆண்டு காரைக்குடி சட்டமன்றத் தேர்தலில் திமுக -பாஜக கூட்டணி சார்பில் வெற்றியும் பெற்றார்.
இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிமுக கூட்டணி பலத்தால் காரைக்குடியில் களம் காண்கிறார் ராஜா. கடந்த 2019 தேர்தலில் அதிமுக மாவட்டசெயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான செந்தில்நாதன் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட கடும் முயற்சி செய்தார். அப்போது கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் பாஜக சார்பில் ராஜா போட்டியிட்டார்.
போட்டியிட வாய்ப்பு கிடைக்காத செந்தில்நாதனிடம் ஒரு சமரச உறவை ஏற்படுத்தினார் ராஜா. அதாவது வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் காரைக்குடியில் செந்தில் நாதனை வேட்பாளராக நிறுத்த உதவுவதாக உறுதியளித்தார்.
இதனால் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் காரைக்குடி தொகுதியில் போட்டியிட எண்ணி தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். ஒன்றிய, வட்ட செயலாளர்களுக்கு தலா 20 ஆயிரம் வரை கொடுத்து தன் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்..
இந்த நிலையில் எச்.ராஜா தனக்கு சென்னையில் தொகுதி ஒதுக்குமாறு கேட்டார், பாஜக மேலிடம் அதை தர மறுத்தது. தனக்கு நியமன எம்.பி தருமாறு வேண்டினார். ஆனால் பாஜக மேலிடம் இவர் கோரிக்கையைச் செவிசாய்க்காமல் நீங்கள் சொந்த தொகுதியான காரைக்குடியில் மக்களைச் சந்தித்து வென்று வாருங்கள் என ராஜாவிடம் கூறியது.
காரைக்குடி தொகுதியை அதிமுகவிடம் இருந்து பெற்றதனால் . செந்தில் நாதன் சிவகங்கை தொகுதிக்கு மாறினார். அங்கு அமைச்சர் பாஸ்கரனின் நெருங்கிய ஆதரவாளர்களால் குழப்பமான சூழ்நிலை உருவானது.
அதிமுகவின் முழுபலத்துடன் இந்த முறை வென்றே தீரவேண்டும் என்ற உறுதியோடு காரைக்குடியில் ராஜா களம் இறங்கினார்.
இந்த முறை காரைக்குடியில் வென்றால்தான் எச்.ராஜாவுக்கு அரசியல் எதிர்காலம் உள்ளது என பாஜகவினர் பேசிக் கொள்கின்றனர்..
ராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமி ராஜாவுடனே பரப்புரை மேற்கொண்டார். அவர் தனக்கு சிவகங்கை அதிமுக மாவட்ட செயலாளர் பதவி பெற்றுத் தர ராஜா உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
ராஜாவுக்கு பக்கபலமாக ஆர்எஸ்எஸ் மற்றும் பிற மாவட்ட,மாநில இளைஞர்கள் தொகுதி முழுவதும் பரப்புரை மேற்கொண்டனர். தேர்தல் நெருங்கும் வேலையில் அதிமுகவினரிடையே சுணக்கம் ஏற்பட்டது. அதற்கான காரணங்களை ஆராய்ந்த போது நகர,ஒன்றிய,வட்ட செயலாளர்களுக்கு பணம் கொடுக்காததால் அவர்களிடம் சுணக்கம் வந்ததாக தெரிந்தது. அவர்களுக்குப் பணத்தை கொடுத்து தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டார் ராஜா. இந்நிலையில் வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ரூ.300 கொடுக்க முடிவு செய்தார் ராஜா இதை அதிமுக,பாஜக இருகட்சியினரும் ஏற்கவில்லை, இதனால் உள்ளுர் பிரமுகரிடம் 2 கோடி வாங்கி ஆரம்ப செலவுகளுக்கு பணம் கொடுத்து வந்ததாகவும், சென்னையிலிருந்து காவல் வாகனம் மூலம் ரூ.8 கோடி வந்ததாகவும் பாஜகவினர் பேசிக்கொள்கின்றனர்..
பாஜகவினர் மேற்பார்வையில் ஆயிரம் வாக்கு இருக்கும் வாக்கு சாவடியில் 300 பேருக்கு பணம்தர முடிவு செய்யப்பட்டது. பணம் அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் சில நிர்வாகிகள் சரிவர பணம் வினியோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்தது. இதில் பல வட்டச்செயலாளர்கள் பணத்தை முறையாக வாக்காளர்களுக்கு கொடுக்கவில்லை . இப்படிப்பட்ட வட்டசெயலாளர்களை பாஜகவினர் அழைத்து கண்டித்துள்ளனர். இந்த தகவலை கேட்ட காரைக்குடி அதிமுக நகர செயலாளர் மெய்யப்பன் நேரடியாக பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு வந்து தனது கட்சிக்காரர்களை அழைத்து அவமானப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கோபத்தை வெளிகாட்டினார். இதனையடுத்து பாஜகவினர் மௌனமாகினர்
இதனால் தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா வாக்காளர்களுக்கு சரிவரசேரவில்லை .
பழைய பாசத்தில் சிலர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டுள்ளனர்.
இதற்கிடையே அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியும் பல அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளார்.
சில அதிமுக நிர்வாகிகளின் கணத்த மௌனத்தால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். எது என்னவோ ராஜா அதிமுக கூட்டணி பலத்தில் வென்று விடலாம் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
ஆனால் மக்களிடையே சமையல் கேஸ் விலையே பிரதானமாக பேசப்படுகிறது குறிப்பாக பெண்களிடம்.
மாங்குடி
காங்கிரஸின் உள்குத்து,திமுகவின் வெளிக்குத்து..
காங்கிரஸ் வேட்பாளராக மாங்குடி இங்கு போட்டியிடுகிறார். சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இரு முறை பதவிவகித்தவர் எளிதில் அணுக கூடியவர். காங்கிரஸ் கட்சியில் தொழிலதிபர் படிக்காசு மகன் , தேவகோட்டை வேலுச்சாமி போன்றோர் வாய்ப்பு கோரினர். இதனிடையே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருமே மாங்குடிக்கு ஆதரவளித்தனர். வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட இழுபறியால் பரப்புரை கேள்விக்குறியானது.
இந்நிலையில் திமுக நிர்வாகிகள் காரைக்குடி தொகுதி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்தனர் தேவகோட்டை ஜோன்ஸ் ரூசோ, காரைக்குடி திமுக நகர செயலாளர் குணசேகரன்,முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துதுரை போன்றோர் திமுகவில் வாய்ப்பு கேட்டிருந்தனர். வாய்ப்பு கிடைக்காததால் திமுகவினர் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இவர்களையெல்லாம் சரி செய்து பரப்புரை மேற்கொள்வதற்கு மிகவும் காலதாமதமானது.
இதற்கிடையே சங்கராபுரம் பஞ்சாத்து தேர்தலில் மாங்குடி மனைவி தேவியை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினியின் கணவர் ஐயப்பன் மாங்குடியை தோற்கடித்தே ஆகவேண்டும் என்று களம் இறங்கினார்.
இதற்காக திமுக ஒன்றிய, வட்டச் செயலாளர்கள் மற்றும் சில காங்., நிர்வாகிகளை அணுகி அவர்களின் தகுதியறிந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுத்து “கை” சின்னத்திற்கு வாக்களிக்காமலும், தேர்தல் வேலை செய்யாமலும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் “குக்கர்” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கூறிநேரடியாக களம் இறங்கினார். இவருக்கு உறுதுணையாக தான் சார்ந்த திமுக மற்றும் காங்.. உள்ள சாதியினைரை தேர்தல் வேலை செய்யவிடாமல் மறைமுகமாகத் தடுத்தார். இது போன்று தேவகோட்டை பகுதியில் ஜோன்ஸ் ரூசோ தான் சார்ந்த சாதியினரை “கை” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் கூறியதாக தகவல்கள் தெரியவருகிறது.
காங்.,கட்சியை சார்ந்த வேலுச்சாமி தான் சார்ந்த சாதியினர் மற்றும் தொழில் முறை நண்பர்களிடமும் “கை” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்பட்டது.
இதுபோல் திமுக வட்டச் செயலாளர்கள் சிலரைத் தவிர பலர் பணம் பெற்றுக் கொண்டு “கை” சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்காமல் கூட்டணி கட்சிக்கு துரோகம் செய்தனர்.
திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாததால் ப.சிதம்பரம் மாநில இலக்கிய அணிச் செயலாளர் தென்னவன் வீட்டிற்கு 2 முறை சென்றும் திமுகவினர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபடி மேலாக கார்த்தி சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
இவளவு நெருக்கடி கொடுத்தும் திமுகவின் ஒருசில நிர்வாகிகள் தான் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் மாவட்டசெயலாளர் பெரியகருப்பன் போட்டியிடும் திருப்பத்துார் தொகுதிக்குச் சென்று தேர்தல் வேலை செய்யுமாறு திமுகவினரிடம் கூறியுள்ளனர்.
பாஜக, அமமுக பணம் கொடுத்து வரும் நிலையில் திமுகவினர் வேட்பாளர் மாங்குடியிடம் பணம் கேட்டனர் மாங்குடி தனது சொந்தங்களை வைத்து திமுகவினர் கூறும் இடங்களில் பணம் பட்டுவாடா செய்ததாக தெரிய வருகிறது .திமுகவினர் தங்கள் கையில் பணம் கொடுக்கவில்லை என கொந்தளித்தனர். திமுக நிர்வாகிகள் பலபேர் மாங்குடிக்கு வேலை செய்யவில்லை என்பது மட்டும் உண்மை.
இந்த துரோகச்செயலில் ஈடுபட்ட திமுகவினரை் குறித்து ஐபேக் நிறுவனம் ரகசிய விசாரணை செய்து வருகிறதாம்.
திமுகவைவிட காங்கிரஸின் உள்குத்து மிகக் கேவலமானது. மாநில பொறுப்பில் உள்ள சுந்தரம் நேரடியாகவே மாங்குடிக்கு எதிராக வேலை செய்தார். “கை” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறிய அவர் அமமுக வேட்பாளருக்கு தனது நேரடியான ஆதரவைத் தெரிவித்து அவருக்கு ஆதரவு திரட்டினார். ஐயப்பனுக்கு மூளையாக செயல்பட்டதே சுந்தரம்தான் என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.தற்போதும் மாங்குடி தோற்றால் அது கார்த்தி சிதம்பரத்தின் தோல்வி என சுந்தரம் செயல்பட்டுவருகிறார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சுந்தரம் செயல்பட்டார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் அவர் மீது காங்கிரஸ் கட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தது யார்.. தற்போது அவர் நேரடியாக அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது. மாநில தலைவர் அழகிரி உள்பட அனைவரும் ஏன் மௌனம் காக்கின்றனர்.
தேர்தலில் திமுகவினர் ஒத்துழைப்பு தரவில்லை என திமுக நிர்வாகி தென்னவனைச் சந்தித்த ப.சிதம்பரம் ஏன் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க கோரவில்லை, சுந்தரம், தேர்போகி பாண்டி அமமுக நகரச்செயலாளர் சரவணன் உள்பட அமமுக தொண்டர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளிவந்தும் காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாங்குடிக்கு எதிராக மாநில பொறுப்பில் உள்ள சுந்தரமே உள்குத்து செய்துள்ளதை காங்கிரஸ் கண்டிக்காததை திமுகவினர் சுட்டிக்காட்டிவருகின்றனர்.
இந்த இரு கட்சியினரின் துரோகச் செயல் பற்றி மதிமுக நகர செயலாளர் பசும்பொன் மனோகரனிடம் திமுகவைச் சார்ந்த முருகன் பேசிய ஆடியோ இதற்கு சாட்சி ஆடியோ கிளிப்.
இத்தகைய துரோகச் செயலிலும் மாங்குடி வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
தேர்போகி பாண்டி
அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேவகோட்டை பகுதியில் அதிக வாக்கு தனக்கு கிடைத்தது. அதனுடன் தான் சார்ந்த சாதி வாக்குகள் எனக்கு கிடைப்பதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அமமுக சின்னமான குக்கர் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் பரவச்செய்துவிட்டோம் என்று அமமுகவினர் தெரிவிக்கின்றனர். பணத்தோடு சாதி பலம் சேர்வதால் தேர்போகி பாண்டி வெற்றி பெறுவார் என்கின்றனர் அமமுகவினர்.
அதிமுக மற்றும் திமுகவில் உள்ள தன் சாதி நிர்வாகிகளைச் சந்தித்து மறைமுக முகமாக ஆதரவு கோரியிருந்தார் தேர்போகி பாண்டி. . அதிமுக நிர்வாகிகள் பலர் தேர்போகி பாண்டிக்கு ஆதரவாக செயல்படுவதாகவே அமமுகவினர் கூறி வருகின்றனர். தேர்போகி பாண்டியே அதிமுக நிர்வாகிகளிடம் நேரடியாக தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டியுள்ளார்.
அமமுகாவின் நகர செயலாளர் சரவணன் மற்றும் வட்டச் செயலாளர்களை நம்பாமல் ஒதுக்கி தேர்போகி பாண்டிக்காக ஐயப்பன் சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களை வைத்து வாக்காளர்க்கு பணம் பட்டுவாடா செய்துவந்தார்.
நாம் தமிழர் வேட்பாளர் துரை மாணிக்கம் கணிசமான இளைஞர்களின் வாக்கை பிரிக்கின்றார்.சீமானின் பேச்சில் மயங்கிய இளைஞர்கள்,முதல் தலைமுறையினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகிறது.
பணம் பாதாளம் வரை பாய்ந்தது போல் ஒவ்வொரு கட்சியும் மிகைப்படுத்துகின்றனர். பொய்யான செய்தியைப் பரப்புகின்றனர். வேட்பாளர்கள் கொடுத்த பணம் ஒரு சிலரை மட்டுமே சென்றுள்ளது. ஒருவரே 3 கட்சிகளிடமும் பணம் பெற்றுள்ளனர். 25 சதவிகித வாக்களர்களுக்கே பணம் வினியோகிக்கப்பட்டுள்ளது. 75 சதவிகித வாக்காளர்களுக்கு பணம் சேரவில்லை, இப்படியிருக்க பணத்தால் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எப்படி பரப்பப்படுகிறது.
இனி வரும் தேர்தல்களில் சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் யாரும் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடுவது சிரமம். அரசியல் கட்சிகளை விட வாக்காளர் தனக்கு பணம் கிடைக்கவில்லை என அதிகமாக புலம்புகின்றனர். அரசியலில் இதைவிட கேவலமான நிலை என்பது உண்டோ..
இந்த தேர்தலில் சாதியா…பணமா… துரோகமா எது வெல்லும் எனப் பார்ப்போம்.. இவை அனைத்தையும் வீழ்த்தி தர்மம் வெல்லுமா மே-2-ஆம் தேதி தெரியவரும் அதுவரை பொறுத்திருப்போம்.
செய்தி & படங்கள்
வெற்றியூர் இராஜஇந்திரன்,
சிங்க தேவன்