கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீக் எண்டுக்குப் பிறகு பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து வந்தார். அப்போது, 75 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு பாஜக மேலிடம் சார்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றினால் போராட்டம் நடத்துவோம் என்று அவரது லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த சாமியார்கள் மிரட்டல் விடுக்கத் தொடங்கினர. இதையடுத்து, தாம் பாஜகவின் தொண்டனாக பணியாற்றவே விரும்புவதாகவும், கட்சி மேலிடத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அவரது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, எடியூரப்பா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்ட போது, “எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அதனைக் கொண்டாடும் விழா நடைபெற இருக்கிறது. ஜூலை 26 க்குப் பின்னர் பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்வேன். இதுவரை பதவி விலகுமாறு என்னை யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. அப்படிக் கூறினால் விலகி விடுவேன். எல்லாம் வீக் எண்டுக்குப் பிறகு தெரியும்.” என்று பதிலளித்துள்ளார்.