முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக மேற்கொண்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனு மீதான நடவடிக்கையாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறந்த திட்டம், சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், வேப்பங்குளம் கிராமத்தில் மிக எளிமையாக தொடங்கப்பட்டு, அடுத்த கட்ட செயல்பாடுகள் சூடுபிடித்துள்ளன.
தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், விதைப்பது முதல் விளைச்சலை விற்பனை செய்வது வரையிலான செயல்பாடுகளில் விவசாயிகளுக்கு உதவியும், பயிற்சியும் அளித்து, வேளாண்மையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் இலக்கு. இந்த மாபெரும் திட்டத்திற்கான முன்னோட்டமாகவே வேப்பங்குளம் கிராமத்தில் Agri Management ICT Centre என்ற மையத்தை அமைக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அண்மையில் உத்தரவிட்டுள்ளார். IT- Rural என்ற அமைப்பின் நிறுவனர் திருச்செல்வம் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப் பணயத்தின் போது, பெருங் கூட்டத்தில் ஒருவராக நின்று, முதலமைச்சரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இத்தகைய துரித நடவடிக்கையை எடுத்து வருவதை அறிந்து அப்பகுதி மக்களே வியப்படைகின்றனர். இதற்கான விரிவான உத்தரவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஒரு கிராமத்தில் வேளாண்மையை போதிய லாபம் தரக்கூடிய வாழ்வாதாரத் தொழிலாக மாற்றுவதற்கு தற்போது உள்ள அரசு இயந்திரத்தின் செயல்பாட்டு அங்கங்களே போதுமானவை என்பது தெளிவாகிறது.
இத்திட்டத்தின் படி, அரசின் ஒத்துழைப்புடன் வேப்பங்குளம் கிராமத்தில் வேளாண் தகவல் தொழில் நுட்ப மையத்தை அமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐடி ரூரல் அமைப்பின் திட்ட இயக்குநரான திருச்செல்வம் எடுத்து வருகிறார்.
வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற விவசாயிக்கு வேளாண்துறை சார்பாக நெல் வரிசை இயந்திரம் ஒன்று வழங்கும் நிகழ்வு திங்கள் கிழமை (06.09.2021) நடைபெற்றது. வேளாண்மை இயக்குநர் அழகுராஜா, துணை வேளாண் அலுவலர் சேகர், உதவி வேளாண் அலுவலர் கு. பாண்டீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்று அந்த இயந்திரத்தை வழங்கினர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரையின் போது வழங்கப்பட்ட மிகமுக்கியமான திட்டத்திற்கான மனுவின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவிலேயே முழுமையான முதல் டிஜிடல் வேளாண் கிராமம் என்ற பெருமையை வேப்பங்குளம் கிராமம் பெற இருக்கிறது.
ஆனால், இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் குறித்து அரசு தரப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படாதது தங்களுக்கு மனக்குறையை ஏற்படுத்துவதாக அந்தக் கிராமத்து மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
“விரிவான அறிவிப்புகளுடனும், முறையான கட்டமைப்புகளுடனும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டால், இந்திய அளவில் வேளாண் பிரச்சினைக்கான தீர்வை நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கும் முதல் – முதலமைச்சராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட மிகப் பெரிய தலைவராகவும் இந்தியா முழுவதும் நமது முதலமைச்சர் அறியப்படுவார் என்பதில் அய்யமில்லை” என்கிறார் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி, வேளாண்துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் வேளாண் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் திருச்செல்வம்.
இந்தத் திட்டத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, உரிய வகையில் முன்னெடுக்க தமிழ்நாடு அரசின் உயர் மட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?
- மகிழ்மதி