4 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடு பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் என உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு சென்றார்.
அமெரிக்க அதிபருடன் இருநாட்டு உறவை மேம்படுத்துவது, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாளை மறுநாள் குவாட் மாநாட்டிலும், வரும் 25-ம் தேதி ஐ.நா பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடம்பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் பாகிஸ்தான், சீனாவில் நிலைப்பாடு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தலீபான்களுக்கு ஆதரவு வழங்கி உள்ளது.
இந்தோ பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து குவாட் மாநாட்டில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்க் மாநாட்டில் தலீபான் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இரண்டாவது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
முதல் முதலாக பங்களாதேஷிற்கு இந்த விமானத்தில் பயணம் செய்திருந்த நிலையில் இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பயணிக்கிறார்