2021-22 ஆண்டிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டிருப்பதை, சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 5 மாணவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்ததாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் முகக்கவசத்தில் மைக் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையம் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தில் பயின்ற ஐந்து மாணவர்களின் பெற்றோரிடம் 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது.
இதற்காக மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய ஓ.எம்.ஆர் தாள்களில் போலியாகத் திருத்தம் செய்தும், ஹால் டிக்கெட்டுகளில் மார்பிங் முறையில் புகைப்படங்களை மாற்றியும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதற்காக தேர்வு எழுதியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கியதையும் சி.பி.ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பயிற்சி மையத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மையத்தின் உரிமையாளர் பரிமால் மீதும் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.