பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்க நேற்று விமானம் மூலம் மதுரை வந்த தமிழக முதல்வர் மதுரையில் தங்கி இருந்தார்.
இன்று காலை மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக தற்போது பசும்பொன் வந்திருக்கிறார். பசும்பொன்னில் தற்போது மாலை அணிவித்துவிட்டு இங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இன்று காலை முதல் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்த வரை இதற்கு முன்பு பலமுறை இந்த நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். முதல்வராக பதவியேற்றபிறகு முதன்முறையாக தற்போது இங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்த உள்ளனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு இந்த பகுதி முழுவதும் 10,000-திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். 27ஆம் தேதி தொடங்கிய இந்த குரு பூஜை விழா என்பது இன்றுடன் நிறைவடைகிறது.