ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பாஜக தூக்கி வீசபட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசு அதிகாரத்தில் பாஜக அகற்றப்பட்டு, வங்கக்கடலில் வீசபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டிற்கு நல்லது செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ள சந்திர சேகர ராவ், வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமானால் பாஜகவை தூக்கி வீச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி மிகவும் குறுகிய எண்ணம் கொண்டவராக உள்ளார் என்று சந்திர சேகர ராவ் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் பட்ஜெட் ஒரு கோல்மால் பட்ஜெட். அதில் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை.தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். முன்னேற்றத்திற்கான எந்த அம்சமும் ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை,’ என்றார்.
பாஜக, காங்கிரஸ் இரு தேசிய கட்சிகளும் நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தவறிவிட்டதாக சந்திர சேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்காக தாம் பல்வேறு தலைவர்களுடன் பேசி இருப்பதாக கூறியுள்ள சந்திர சேகர ராவ், விரைவில் அதற்கான திட்டத்தை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்திர சேகர ராவ் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.